முதல் தேதியில் முக்கிய அறிவிப்பு
லூக்கா 21:34-36
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஆண்டின் கடைசிமாதம் டிசம்பர். இந்த மாதம் நல்ல குளுகுளு மாதம். மானிடமகன் வரும் நாளில் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதே இம்மாதத்தின் முக்கிய அறிவிப்பு. மிகச் சிறந்த தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தியின் மையமாகும். இரண்டு விதங்களில் நாம் இருக்க கூடாது.
1. குடிவெறி
தமிழ்நாடு குடியினால் தள்ளாடுகிறது. எல்லா ஊர்களிலும் மது கடைகளை அரசு திறந்து வைத்திருக்கிறது. குடிப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. மிகவும் மோசமாக படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடியினால் ஏற்பட்டிருக்கிற தீமைகள் அதிகம். குடிநோயாளிகள் மனநோளிகளாக நடமாடுகின்றனர். இது சமூக சீர்கேட்டிற்கு காரணமாக அமைகின்றது. அன்புமிக்கவர்களே! குடிவெறியிலிருந்து வெளியே வர வேண்டும். வந்தால் தான் மானிடமகனை தலைநிமிர்ந்து வரவேற்க முடியும். தயவுசெய்து தயாரியுங்கள். உங்களை மாற்றுங்கள். நாட்டையும், திருச்சபையையும் இந்த குடியிலிருந்து கண்டிப்பாக காப்பாற்றுவோம்.
2. கூடாநெறி
மிகச்சிறந்த கற்பு நெறி வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் ஒருத்திக்கு ஒருவன் என்பதும் மிக கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எந்தவிதமான உணர்வுகளைத் தூண்டும் தொந்தரவும் கொடுக்க கூடாது. யாருக்கும் செல்போன், இண்டா்நெட் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி உணர்வுகளைத் தூண்டும் தொந்தரவுகளை கொடுக்க கூடாது. ஒழுக்கமான நெறியைப் பின்பற்றி கற்பையும் அடுத்தவரையும் பாதுகாக்க வேண்டும். இப்படி செய்தால் தான் மானிடமகனை தலைநிமிர்ந்து வரவேற்க முடியும். தயவுசெய்து தயாரியுங்கள். உங்களை மாற்றுங்கள். நாட்டையும், திருச்சபையையும் இந்த கூடா நெறியிலிருந்து கண்டிப்பாக காப்பாற்றுவோம்.
மனதில் கேட்க…
1. எனக்கு டிசம்பர் மாத முக்கிய அறிவிப்பு என்னவென்று தெரியுமா?
2. குடிவெறி. கூடாநெறி இரண்டும் என்னை சீர்குலைக்கும் வெடிமருந்துகள் எனக்கு தெரியுமா?
மனதில் பதிக்க…
உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.(லூக் 21:34)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா