மீட்பு: சிலருக்கா? பலருக்கா?
லூக்கா 13:22-30
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நம்பிக்கையின் மறைபொருள்: இயேசு இறந்தார், உயிர்த்தார், மீண்டும் வருவார் என்பதை நாம் அனுதினமும் திருப்பலியில் உரக்க அறிக்கையிடுகிறோம். அதற்கு இன்னும் அதிக ஆதாரம் தருவதாய் வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் அனைவரும் ஆர்வமாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை என்பது கண்டிப்பாக உண்டு என்கிறது. இயேசுவின் இரண்டாம் வருகை நிகழ்வதற்குள் நாம் ஒருசில தயாரிப்புக்களையும் செய்ய வேண்டும் என்கிறது இன்றைய வழிபாடு. அவற்றுள் இரண்டு தயாரிப்புக்கள் தலையாயது.
1. ஒரே கூட்டம்
நாம் ஒரே கூட்டத்தை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒரே கூட்டம் என்பது மிகவும் தெளிவாக தெரிய வேண்டும். ஆகவே இப்போது நமக்குள் இருக்கிற பிளவுகள், பிரிவுகள் அனைத்தையும் அவர் வருவதற்குள் சரிசெய்ய வேண்டும். குடும்பங்களுக்குள், அன்பியங்களுக்குள், பங்கிற்குள், திருச்சபைக்குள் இருக்கின்ற இறுக்கங்கள் உடைய வேண்டும். அதற்கு நல்ல தயாரிப்பு செய்ய வேண்டும். அப்படி தயாரிக்கும் போது மீட்பு ஒரு சிலருக்கு மட்டுமல்ல மாறாக நம் அனைவருக்கும் கட்டாயம் உண்டு.
2. ஒரே நோக்கம்
ஒரே கூட்டத்தைச் சேர்ந்த நம் நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும். அது இயேசு விரும்புகிற நோக்கமாக இறையரசை கொண்டு வருகிற நோக்கமாக இருக்க வேண்டும். தன்னல விருப்புக்களை அறுக்க வேண்டும். அதற்கான ஆசைகள் கொண்டவர்களை அடிக்க வேண்டும். இந்த தயாரிப்பும் மிக இன்றியமையாததே. இப்படி தயாரிக்கும் போது மீட்பு ஒரு சிலருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும்.
மனதில் கேட்க…
1. என்னுடைய மீட்புக்காக இதுவரை தயாரித்தது என்ன? கொஞ்சம் யோசித்து பார்க்கலாமா?
2. என் பங்கு மக்களோடு ஒரே நோக்கத்தோடு சோ்ந்து வாழ முடிகிறதா? இல்லையென்றால் மாற்றலமா?
மனதில் பதிக்க…
மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பீர்கள் (மாற் 6:4)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா