”மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்” (லூக்கா 12:48)
திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். அப்போது வீட்டுப் பணியாளர்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும் கதவைத் திறந்து அவரை வரவேற்று, அவருக்குப் பணிவிடை செய்வதே முறை. ஆனால் வீட்டுத் தலைவரே பணியாளரைப் பந்தியில் அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்தால் அது ஆச்சரியமான செயல்தான். இவ்வாறு ஓர் உவமையை இயேசு கூறியதும் பேதுரு அந்த உவமையில் வருகின்ற பணியாளர் யார் என்றொரு கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு இயேசு அளித்த பதில், ”மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்” என்பதே. கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்திச் செல்கின்ற பணி வீட்டுப் பொறுப்பாளராகிய பேதுரு போன்ற திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமக்குக் கொடுக்கப்பட்ட சலுகை, பதவி, அந்தஸ்து ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, தமக்கென்று ஆதாயம் தேடுகிறவர்களாக அன்றைய திருத்தூதர்களோ இன்றைய திருச்சபைத் தலைவர்களோ செயல்படலாகாது என இயேசு விளக்கிச் சொல்கின்றார்.
கடவுள் நமக்குத் தருகின்ற திறமைகளும் பொறுப்புகளும் பிறருடைய நலனுக்குப் பயன்பட வேண்டும். கடவுளிடமிருந்து வருகின்ற கொடைகள் நமக்குத் தரப்படவேண்டும் என நாம் உரிமை கொண்டாடுவது சரியல்ல. ஏனென்றால் நாம் உரிமையாளர் அல்ல, மாறாக, பொறுப்பாளர் மட்டுமே. பொறுப்பாளராகிய நாம் உரிமையாளராகிய கடவுளுக்குக் கடன்பட்டவர்கள்; எனவே, நம்மிடம் தரப்பட்ட பொறுப்பை நாம் எவ்வாறு செயல்படுத்தினோம் என்பது குறித்துக் கடவுளின் முன்னிலையில் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். ஆக, மிகுதியாகப் பொறுப்புப் பெற்றவர்களிடமிருந்து மிகுதியாக எதிர்பார்க்கப்படும் என இயேசு கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தும். கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பொறுப்பு நாம் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதும் அனைவரும் கடவுளைக் கண்டடைய நாம் வழியாக வேண்டும் என்பதுமே. கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதை அவருக்கு அளிக்க நாம் தயாரா?
மன்றாட்டு
இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை நன்றியோடும் கடமையுணர்வோடும் செயல்படுத்த அருள்தாரும்.
~ அருட்திரு பவுல் லியோன் வறுவேல்