மாற்றங்கள் மலரட்டும்
இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21) ஒரு வித்தியாசமான நிகழ்வு நடைபெறுகிறது. இயேசு வழக்கமாக அணுகுவதற்கு எளிதானவர். மக்கள் நடுவில் ஒரு பிரபலமான போதனையாளராக இருந்தாலும், கூட்டம் அதிகமாக இயேசுவைச் சூழ்ந்திருந்தாலும், இயேசு சாதாரண ஏழைகளும், எளியவர்களும் அணுகுவதற்கு எளிதானவராக இருந்தார். பாவிகளையும் அரவணைத்தார். குழந்தைகளை ஆசீர்வதித்தார். ஆனால், இன்றைய நற்செய்தியில், இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரை அணுக முடியவில்லை என்று, நற்செய்தியாளர்கள் சொல்கிறார். இது, இயேசு எந்த அளவுக்கு தனது பணிவாழ்வில் அர்ப்பணம் உள்ளவராகவும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது குடும்பத்தை முன்னிறுத்தாக, பொதுநலம் கொண்ட சிந்தனையாளராக இருந்தார் என்பதை, எடுத்துக்காட்டுகிறது.
நாம் வாழக்கூடிய சமுதாயத்தோடு பொருத்திப்பார்ப்போம். இன்றைக்கு அரசியலாக இருக்கட்டும், ஆன்மீகமாக இருக்கட்டும். அனைத்திலேமே குடும்ப உறவுகளை இணைக்கக்கூடியதை நாம் பார்க்கிறோம். குடும்பத்திற்கு முதன்மையான இடங்களையும், அவர்கள் பொறுப்பில் இல்லையென்றாலும், அதிகாரம் செய்யக்கூடிய அவல நிலை எங்கும் காணப்படுகிறது. தாங்கள் பொதுநலனுக்காக உழைக்க வந்திருக்கிறோம் என்கிற அணுகுமுறை, சிறிதும் இல்லாமல், சுயநலத்தோடு வாழக்கூடிய ஒரு நிலையை நாம் பார்க்கிறோம். மக்களைப் பற்றிய அக்கறை இல்லாது, அனைத்தையும், தானும், தன்னுடைய குடும்பமும் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற மனப்பாங்கு, இன்றைய தலைவர்கள் நடுவில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த நிலை மாற வேண்டும். இந்த நிலையை நாம் தான், மாற்ற வேண்டும். மாற்றம் என்பது தானாக வந்துவிடாது. அதற்காக நாம் சில தியாகங்களைச் செய்தே ஆக வேண்டும். இயேசுவின் மனநிலையோடு வாழ்வதற்கா மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்