மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்
திருப்பாடல் 98: 1- 6
ஆண்டவரை வாழ்த்த வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்பவிடுக்கிறார். எதற்காக கடவுளைப் போற்ற வேண்டும்? ஏனென்றால், அவர் இந்த உலகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுதலையை நமக்குத்தந்திருக்கிறார். இங்கே விடுதலை என்று சொல்லப்படுவது என்ன? எந்த விடுதலையை ஆசிரியர் இங்கே கோடிட்டுக்காட்டுகிறார்? தொடக்கநூலில் (1: 31) நாம் பார்க்கிறோம்: ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாக இருந்தன”. தொடக்கத்தில் இருந்த இந்த ஆரோக்யமான நிலை தொடரவில்லை. அது மனிதனின் கீழ்ப்படியாமையால் இழந்துபோனதாக மாறியது. மனிதனின் தவறால் தீமை இந்த உலகத்திற்குள் நுழைந்தது. தான் படைத்த மனிதனே இப்படி தீமை நுழைவதற்கு காரணமாகிவிட்டானே என்று, கடவுள் கோபம் கொண்டு மானுட சமுதாயத்தை புறந்தள்ளி விடவில்லை. இழந்து போனதை மீட்டெடுக்க வாக்குறுதி கொடுக்கிறார். அந்த எதிர்கால விடுதலையை இறைவாக்கினர் வாயிலாக முன்னறிவிக்கிறார். அந்த விடுதலையைத்தான் இந்த திருப்பாடலில் நாம் பார்க்கிறோம்.
இந்த விடுதலை குறிப்பிட்ட மக்களுக்கானது மட்டுமல்ல. ஏனென்றால், இஸ்ரயேல் மக்கள் என்றைக்குமே தாங்கள் தான் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்ற மமதை கொண்டிருந்தனர். வேற்றினத்தாருக்கு விடுதலை கிடையாது என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், கடவுள் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பவர் கிடையாது. ஒட்டுமொத்த உலகமாகத்தான் மனிதர்களைப் பார்க்கிறார். எனவே, அவர் கொடுக்கக்கூடிய விடுதலை, குறிப்பிட்ட மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்கானது. அந்த விடுதலையை நம்பிக்கை உள்ள அனைவருமே பெற்றுக்கொள்ள முடியும். அந்த விடுதலையைக் கொடுப்பவர் தான், நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து என்பதை, யோவான் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அந்த விடுதலையை எப்படிக் கொண்டு வரப்போகிறார் என்பதை, ”இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்ற குறிப்பால் உணர்த்துகிறார். பழைய ஏற்பாட்டில், எவ்வாறு செம்மறி ஆட்டின் இரத்தம் மக்களின் பாவங்களைப் போக்கியதோ, அதே போல, இயேசு செம்மறியாக இறந்து, மக்களின் பாவங்களைப் போக்கி, கடவுள் அருளிய விடுதலையைக் கொண்டு வரப்போகிறவர் என்று, யோவான் சொல்கிறார்.
நம் அனைவர் மட்டிலும் அன்பு கொண்டு, தன் ஒரே மகனையே நமக்கு பலிகொடுத்து, மீட்பைப் பெற்றுக்கொடுத்திருக்கிற, இறைமகன் இயேசுகிறிஸ்துவுக்கு நாம் எப்படி கைம்மாறு செய்யப்போகிறோம்? என்ன செய்யப்போகிறோம்? சிந்திப்போம். செயல்படுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்