மாத்தி யோசி… மாத்தி கேளு…
மாற்கு 10:35-45
இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 29ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.
வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். ‘ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்’ என்றனர். ‘வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்’ என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவா்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். ‘நான் சிறு பையனாக இருக்கும் போது காடுகளில் விறகு வெட்டி வாழ்க்கையை நடத்தி வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு திருவிவிலியத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மட்டுமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்’ என்றார்.
அன்புமிக்கவர்களே! ஆபிரகாம் லிங்கன் காலையில் எழுந்ததும் ஆண்டவரோடு உறவு வைத்தது மட்டுமன்றி அந்த உறவு ஆழமாக இருந்ததால் ஆண்டவரிடம் என்ன கேட்க வேண்டும் என்பதையும் தெளிவாக தெரிந்திருந்தார். அவர் தினமும் இறைவனிடம், “இறைவா! நோ்மையை கடைப்பிடிக்கவும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உமக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துக்கொள்ளும் வரத்தையும் எனக்கு வாரி வழங்கும்” என்று வேண்டினார். அதுவே ஆபிரகாம் லிங்கன் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சிக்கு காரணம்.
பொதுக்காலம் 29ம் ஞாயிறு கடவுளிடம் எப்படி பேச வேண்டும் என்றும் எப்படி பேசக் கூடாது எனவும் நமக்கு கற்றுத் தருகிறது. நம் எண்ணம், வேண்டல் என்பது கடவுளை மாற்றுவது அல்ல. மாறாக கடவுளோடு பேசும் நாம் நம்மை மாற்ற வேண்டும் என்பதுதான். அதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவரோடு எப்படி பேசக் கூடாது என்பதை கற்றுத் தருகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நடந்த தவறுகள் என்ன? நடந்த தவறுகள் மூன்று. யார் செய்தது? செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவான். அவர்களிடம் பணிவு இல்லை, பொதுநலம் இல்லை, பிறர் அக்கறை இல்லை. மொத்தத்தில் கேட்பது என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆண்டவரில் அன்பானவர்களே! ஆண்டவரிடம் எப்படி கேட்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை பின்வரும் மூன்று நபர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
1. புனித அன்னை தெரசா கேட்ட முறை
செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீா் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். இது மிகப் பெரிய தவறு. கடவுளிடம் இப்படி பேசுவதற்கு, கேட்பதற்கு நாம் எம்மாத்திரம். ஆண்டவரிடம் பேசும்போது அன்பாய் பேசலாம். பாசமாய் பேசலாம். ஆனால் எப்படி பேசுகிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டும். எதைக் கேட்கிறோம் என்பது மிகவும் தெளிவாக தெரிய வேண்டும். அன்னை மரியாள் “நான் உம் அடிமை, உம் விருப்பப்டியே எனக்கு நிகழட்டும்” என்று பணிவாய் சொன்னார்கள். சாமுவேல், “ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன்” என்று தன் பணிவை வெளிப்படுத்தினார். இப்படி பேசுவதுதான், இப்படி கேட்பதுதான் நம்மை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்.
கொல்கத்தாவில் அன்னை தெரேசா அவர்கள் நிறுவியிருந்த தலைமை இல்லத்தில் 300க்கும் அதிகமான நவத்துறவியர் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் காலையில் நகரின் பல பகுதிகளுக்குப் பணி புரியச் சென்றனர். ஒருநாள் அவர்கள் பணிகளுக்குச் சென்றபிறகு, அன்றைய உணவைத் தயார் செய்ய சமயலறைக்குச் சென்ற நவதுறவி ஒருவர், அன்னையிடம் பதட்டத்துடன் ஓடி வந்து, “அம்மா! இன்று மதிய உணவுக்கு, சப்பாத்தி தயாரிக்க மாவு சிறிதும் இல்லை” என்று கூறினார். அப்போது அன்னையின் அருகே அருள் பணியாளர் Langford நின்று கொண்டிருந்தார். இந்தப் பிரச்சனையைக் கேட்டதும், அன்னை தெரேசா, தனக்குத் தெரிந்த தாராள மனம் கொண்ட நிறுவனங்களுக்கு ‘போன்’ செய்து, நிலைமையைக் கூறி, அவர்களிடம் உதவிகள் கேட்பார் என்று அருள் பணியாளர் Langford காத்திருந்தார். அன்னை தெரேசா உதவி கேட்டார்…
ஆனால், வேறு எந்த நிறுவனத்திடமும் அல்ல, இறைவனிடம். அன்னை, அந்த நவதுறவியிடம், “சகோதரியே, இந்த வாரம் சமையலறைக்கு நீங்கள்தானே பொறுப்பு? எனவே, நீங்கள் உடனடியாகக் கோவிலுக்குச் சென்று, நமக்கு உணவு ஏதும் இல்லை என்ற நிலையை இயேசுவிடம் சொல்லுங்கள்” என்று கூறியபடி, அருள் பணியாளர் Langford உடன் அவ்விடம் விட்டு அகன்றார். அச்சகோதரியும் கோவிலை நோக்கி நடந்தார்.
அவர்கள் அந்த இல்லத்தின் வாசலை அடைந்தபோது, அழைப்பு மணி அடித்தது. அன்னை அவர்கள் கதவைத் திறந்தார். அங்கு அன்னைக்கு முன்பின் அறிமுகம் ஏதும் இல்லாத ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் அன்னையிடம், “அன்னையே, இன்று நகரத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் துவக்கிவிட்டனர். இத்தகவல் எங்களுக்கு இப்போதுதான் கிடைத்தது. நாங்கள் ஏற்கனவே 7000 பேருக்கு மதிய உணவு தயார் செய்துவிட்டோம். ஆனால், பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால், அந்த உணவை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை. இந்த உணவை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று அவர் அன்னையிடம் கேட்டார். அனைவரும் அதிர்ச்சியின் வெள்ளத்தில் மிதந்தனர்.
அன்புமிக்கவர்களே! ஆண்டவரிடத்தில் எப்படி பேச வேண்டும் என்ற முறையை அன்னை அறிந்து வைத்திருந்தார். ஆகவே அவர் பெற்றுக்கொண்டார். அவருக்காக கேட்கவில்லை. அவரோடு இருக்கும் வறியவர்களுக்காக, ஆதரவற்றவர்களுக்காக கேட்டார். அவர்கள் நலம் பெற கேட்டார். நாம் என்ன கேட்கிறோம். நாம் கேட்கும் முறையை மாற்றி்ப் பார்க்கலாம் அல்லவா? மாத்தி யோசியுங்கள்.
2. ஆபிரகாம் லிங்கன் கேட்ட முறை
செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும் அவர்கள் இயேசுவிடம் கேட்டது அவர்கள் சுயநலத்திற்காக. அரியணையில் இருந்தால் அதிகாரம் செய்யலாம், மக்களை அடக்கி ஆளலாம் என்று நினைத்தார்கள். அவா்கள் கருத்து முற்றிலும் தவறானது. பதவியில் இருந்து அந்த சுகத்தை அனுபவிக்கலாம் என்று நினைத்தார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல.
இதற்கு எதிராக ஆபிரகாம் லிங்கம் ஆண்டவரிடம் கேட்டார். ஆபிரகாம் லிங்கன் கேட்ட முறை நமக்கு இருந்தால் நாம் அருமையாக வாழ்வோம். வட அமெரிக்க வரலாற்றில் மிகவும் கடினமான, சவால்கள் நிறைந்த ஐந்து ஆண்டுகள் (1861 – 1865) அரசுத்தலைவராகப் பணிபுரிந்து, அப்பணியிலேயே உயிரை நீத்தவர், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர், ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கிய அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கென்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், அமெரிக்கா, வடக்கு, தெற்கு என்று பிளவுபட்டு, உள்நாட்டுப் போரில் மூழ்கியிருந்த காலம் அது.
ஒருநாள் அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கனைச் சந்திக்க ஓர் இறைபணியாளர் வந்தார். அவர் ஆபிரகாம் லிங்கனிடம், “நான் உங்களிடம் எவ்வித உதவியும் கேட்டு வரவில்லை… உங்களுக்கு ஓர் உறுதியை அளிக்கவே வந்துள்ளேன்” என்று அவர் ஆரம்பித்தார். பின்னர் அவர், “நீங்கள் மேற்கொண்டுள்ள உயர்ந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக எங்கள் மகன்களை போர்க்களத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும், ஒவ்வொருநாளும் எங்கள் நம்பிக்கை, மற்றும் செபங்களை அளித்து வருகிறோம். வட மாநிலங்களில் வாழும் இளையோர் அனைவரின் பெற்றோரும் ஒவ்வொரு நாள் இரவிலும் முழந்தாள்படியிட்டு வேண்டுவதெல்லாம் இதுதான்: நீங்கள் முன்னின்று நடத்தும் இந்த அறப்போராட்டத்தில், இறைவன் உங்களுக்கு மன உறுதியையும், சக்தியையும் தரவேண்டும் என்பதே எங்கள் செபம்” என்று அந்த இறைபணியாளர் கூறினார்.
இதைக் கேட்டதும், கண்களில் கண்ணீர் போங்க, அந்த இறைப்பணியாளரின் கரங்களை உறுதியாகப் பற்றியபடி, “நீங்கள் பரிந்துபேசும் செபங்களை எனக்காக இறைவனிடம் எழுப்பாவிடில், நான் என்றோ என் உயரியக் கொள்கைகளிலிருந்து வீழ்ந்திருப்பேன். இப்போது நீங்கள் என்னைத் தேடி வந்து இவ்வாறு சொன்னபிறகு, நான் நடத்திவரும் போராட்டத்தில் இன்னும் உறுதியாக ஈடுபட எனக்குள் புது சக்தி பிறந்துள்ளதாக உணர்கிறேன்” என்று கூறினார் ஆபிரகாம் லிங்கன்.
“நான் செல்லக்கூடிய இடம் வேறெதுவும் இல்லை என்ற உணர்வு என்னை முழந்தாள்படியிட வைத்தது. எனது சொந்த அறிவும் என்னைச் சுற்றியுள்ள அனைத்து சக்திகளும் போதாதென்று அவ்வேளைகளில் உணர்ந்திருக்கிறேன்” என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
ஆபிரகாம் லிங்கன் இறைவனிடம் வலுவடைந்த நேரத்தில் சக்தி கேட்டார். தளர்ச்சியுற்ற நேரத்தில் ஆற்றல் கேட்டார். மக்களுக்கான விடுதலையைக் கேட்டார். அவருக்காக எதையும் மன்றாடவில்லை. மக்களுக்காக கேட்டார். நம்பிக்கையோடு கேட்டார். அனைத்தையும் பெற்றுக்கொண்டார். நாம் என்ன கேட்கிறோம். நாம் கேட்கும் முறையை மாற்றி்ப் பார்க்கலாம் அல்லவா? மாத்தி யோசியுங்கள்.
3. புனித குழந்தை தெரசம்மாள் கேட்ட முறை
செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் கேட்டதில் அர்த்தம் என்பது இல்லை. இயேசுவிடம் வெறும் சுகங்களை மட்டுமே கேட்க கூடாது. மாறாக துயரங்களை கேட்க வேண்டும். அந்த துயரங்கள் மற்றவர்கள் நலனுக்காக, அவர்கள் முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டும் என்பதை புனித குழந்தை தெரசம்மாள் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது.
புனித குழந்தை தெரசம்மாள் வாழ்க்கை நமக்கு மிகப்பெரிய உதாரணமாக விளங்குகிறது. ஒருநாள் மாலைப்பொழுதில் நோயாளிகளைச் சந்தித்தவாறு தெரேசாளிடம் வந்தார் ஆக்னஸ் தாயார். “தாயே” என்று அழைத்தவாறு எழுந்திருக்க முயன்றாள் குழந்தை தெரசம்மாள். “வேண்டாம், படுத்துக்கொள்” என்றார் தாயார்.
அன்னையே, விரைவில் நான் விண்ணக வீட்டுக்குச் செல்வேன். அவ்வாறு செல்லும்போது நான் வெறுமையாக செல்லக்கூடாதல்லவா? என் செபத்தாலும், ஒறுத்தலாலும் மனம் திரும்பிய ஓர் ஆன்மாவை என் கையில் எடுத்துச் செல்வேன். என் முயற்சியால் நரகத்தில் ஒரு ஆன்மா குறையும். மோட்சத்தில் ஒரு ஆன்மா அதிகரிக்கும். இச்செயலைப் பார்த்து இயேசு என்னை விண்ணக்த்திற்கு எடுத்துச் செல்வார். ஆக்னஸ் தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டன.
அன்பு இறைமக்களே! மேலும் தெரசாள் மரணப்படுக்கையில் இருக்கும் போது அவர் சொன்ன வார்த்தைகளை யாரும் மறக்கவே முடியாது. “நான் இறந்தபின் இவ்வுலகின் மீது ரோஜாமலர் போன்று மழையைப் பொழிவேன். என் விண்ணக வாழ்வு நன்மை செய்வதிலே கடன்பட்டு கிடக்கும். எனக்கு ஓய்வு இல்லை”. என்று சொன்னார்.
புனித குழந்தை தெரசம்மாள் இறுதி வரை மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட அடுத்தவர் நலன் பெற வேண்டும், ஆன்மாவை ஆண்டவரின் கரத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்தார். அதைத்தான் ஆண்டவரிடம் கேட்டார். சுகங்களை அல்ல துயரங்களை அனுமதித்தார். துயரங்களில் தூயவரை மிகவே போற்றினார். கடைசி வரை விண்ணகத்திலும் அடுத்தவர் ஆன்மா வாழ்வு பெற, இறைவனில் இணைய ஓய்வின்றி உழைப்பேன் என முடிவெடுத்தார். அதற்காக ஆண்டவரிடம் வரம் கேட்டார். நாம் என்ன கேட்கிறோம். நாம் கேட்கும் முறையை மாற்றி்ப் பார்க்கலாம் அல்லவா? மாத்தி யோசியுங்கள்.
மனதில் கேட்க…
1. ஆண்டவரிடம் நான் கேட்கும் போது பெரும்பாலும் யாருக்காக கேட்கிறேன்?
2. புனிதா்கள், சிறந்த மனிதர்கள் ஆண்டவரிடம் கேட்டது போன்று நானும் பழகிக்கொள்ளலாம் அன்றோ?
மனதில் பதிக்க…
தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்: ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது: தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். (உரோமையர் 8: 26)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா