மாசற்ற குழந்தைகள் திருவிழா
மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்?
ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில் திணித்து, அவர்களை தங்களுடைய விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்கின்றனர். குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர நாம் முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்