மழுங்கி போய்விட்டோமா?
மழுங்கி போய்விட்டோமா?
இன்றைய நற்செய்தியை 15- ஆம் இறைவார்த்தையை வாசித்துவிட்டு மீண்டும் 14 ஆம் வசனத்தை வாசித்து, தொடர்ந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும். எப்பொழுதுமே இயேசு தனிமையில் தன் சீடர்களோடு இருக்கும் போது அவர்களுக்கு பலவற்றைக் கற்பிப்பார். அப்படித்தான் இன்றைய நற்செய்தியில் ஏற்கனவே அடையாளம் கேட்டு சோதித்த பரிசேயர்களையும் ஏரோதியர்களையும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று தன் பாடத்தை இயேசு கிறிஸ்து கொஞ்சம் கடினமாக ஆரம்பிக்கும் பொழுதே சீடர்கள், சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்ற விவாதத்தில் வரும் குழந்தையைப் போல சாப்பாடு தான் முக்கியமென்று தங்களிடம் உள்ள அப்பத்தைப் பற்றி மாறி மாறி கண்களாலும் சாடைகளினாலும் விவாதிக்க ஆரம்பித்த விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டவர் இன்னும் அதிகமாக எரிச்சலுற்று தன் இதயக் குமுறலை வெளிப்படுத்துகிறார். தான் ஏற்கனவே செய்த அப்பம் பலுகுதலைச் சொல்லி அவர்களைச் சாடுகிறார். அவர் செய்த அனைத்து அருங்குறிகளையும் உட்பொருளையும் பரிசேயரும் பொதுமக்களும் புரிந்து கொள்ளாததில் வியப்பில்லை. ஆனால் சீடர்கள் இவ்வாறு இருந்தது அவருக்கு வேதனையளித்தது.
இது எப்படியிருக்கிறதென்றால் பல ஏக்கர் கணக்கில் வாழைத் தோட்டத்தை வைத்தவர், எனக்கு சாப்பிடுவதற்கு ஒரு வாழை இலை இல்லையே என வாழைத்தோட்டத்திற்குள் நின்று கொண்டு அழுது புலம்புவதைப் போன்று இருக்கிறது. இன்று நாமும் நம் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்துக்; கொண்டிருக்கிறோம். ஆயினும் ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் உடனடியாக கிறிஸ்துவை அறியாதவர்கள் போல புலம்பித் தவிக்கிறோம். அர்ப்பமாண காரியங்களுக்காவும் நம்பிக்கையில்லாமல் கண்ணீர் வடிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலான செபங்களில் தலைச்சிறந்த செபமான திருப்பலியையும் நற்கருணையையும் நம்மோடு வைத்து கொண்டு, அந்த போதகர் அப்படி செய்வார், இப்படி செய்வார், அந்த பூசாரி மந்திரிச்சுக் கட்டுகிற கயிறைக் கையில் கட்டினால் எல்லாம் சரியாயிரும் என சொல்வதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கிற நம் ஆண்டவர் தினமும் குமுறிக் கொண்டுதான் இருப்பார். “மீதித் துண்டுகளை எத்தனைக் கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்பது அவர் நாம் விரும்புவதற்கும் கேட்பதற்கும் மிகுதியாக மீதியிருக்கும் அளவுக்கு செய்வார் என்பதைக் குறிக்கிறது.
– திருத்தொண்டர் வளன் அரசு