மற்றவர்களை மதித்து நடப்போம்
”உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு, உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் ”உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?” என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நிச்சயமாக அவர் புன்முறுவல் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், பழத்திலே ஊசி ஏற்றுவது போல, இயேசு புன்முறுவலோடு, ஒரு செய்தியை அங்கே சொல்கிறார்.
இயேசு சொல்ல வருகிற செய்தி, இந்த உலகத்தில் யாரும் எவரையும் குற்றப்படுத்திப் பேசுவதோ, தீர்ப்பிடுவதோ, குற்றம் கண்டுபிடிப்பதோ கூடாது. அதற்கு ஒருவரும் தகுதியானவர்கள் கிடையாது. அப்படியே குற்றப்படுத்த விரும்பினாலும், குற்றம் இல்லாதவர்கள் குறைகூறலாம் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் குற்றம் இல்லாதவர்கள் எவருமே கிடையாது. எனவே, யாரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதுதான் இயேசு சொல்கிற செய்தி. ஆனால், நாம் ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை நமது வார்த்தைகளால், செயல்பாடுகளால் காயப்படுத்துகிறோம். உண்மையிலே நாம் நேர்மையாளர்கள் என்றால், நிச்சயம் மற்றவர்களை நாம் குற்றப்படுத்த மாட்டோம். அவர்களை ஏற்றுக்கொண்டு தான் வாழ்வோம்.
நாம் நேர்மையாளர்கள் போல, தவறே செய்யாதவர்கள் போல, நமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களை நமக்குக் கீழாக எண்ணுகிறோம். மற்றவர்களை மதித்து, உண்மையான அன்பு செய்து வாழ, ஆண்டவரிடத்தில் நாம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்