மற்றவர்களுக்காக வாழுவோம்
இயேசு தொழுகைக்கூடத்தில் போதனையை முடித்துவிட்டு, பேதுருவின் இல்லம் வருகிறார். வழிபாடு முடித்துவிட்டு வருகிற போதகருக்குத்தான் தெரியும், எவ்வளவுக்கு தனது ஆற்றலை, சக்தியை அந்த வழிபாட்டுக்குத்தான் கொடுத்தோம் என்று. வழிபாடு முடிந்து வருகிற எந்த ஒரு போதகரும், ஓய்வாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்களே ஒழிய, ஓயாது தங்களது உடலை வருத்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள். நிச்சயம் அந்த ஓய்வுக்கு அவர்கள் தகுதியானவர்கள்தான். ஆனால், இயேசு தனக்கு ஓய்வு வேண்டும் என்பது தெரிந்தும், அங்கே மனிதத்தேவை இருக்கிறபோது, தனது ஓய்வை முன்னிறுத்தாமல், தேவையை நிறைவேற்ற வருகிறார்.
பேதுருவின் மாமியார் உடல் நலமடைந்த உடனே, அவர்களுக்கு பணிவிடை செய்ய எழுந்து வந்ததாக நற்செய்தியாளர் எழுதுகிறார். இப்போதுதான் குணமடைந்திருக்கிறது, எனவே இன்னும் நன்றாக ஓய்வு எடுப்போம் என்றில்லாமல், வந்திருக்கிறவர்களை நல்ல முறையில் பேணிக்காக்க மும்முரமாய் இருக்கிறார் அவர். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற உடல் ஆரோக்கியத்தை, ஆற்றலை தேவையில் உள்ளவர்களுக்கு பயன்படுத்த எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை, இயேசுவும், பேதுருவின் மாமியாரும் உணர்த்துகிறார்.கள்.
உடல் ஆரோக்யம் என்பது கடவுள் கொடுத்திருக்கிற உன்னதமான கொடை. எவ்வளவு பொன், பொருள் கொடுத்தாலும் வாங்கமுடியாத கொடை. அத்தகைய கொடை இறைவனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதை பயனுள்ள முறையில் தேவையில் இருக்கிறவர்களுக்கு பயன்படுத்த முன்வருவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்