மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் நம் கடவுள் ஒருவரே!!!
அன்பான சகோதர, சகோதரிகளுக்கு மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் யோசித்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறேன். இது எங்கோ ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாத நடந்த சம்பவம் கிடையாது. இது வரலாற்று உண்மை. நீங்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால் இதன் உண்மையை புரிந்துக் கொள்ளலாம். கி.மு 605 – 536 ஆகிய நிறைந்த வருஷங்களில் பாபிலோனில் அரசாண்ட நேபுகாத்நேசர் என்னும் மன்னன் யூதா நாடாகிய எருசலேம் என்னும் நாட்டை பிடித்து அங்குள்ள மக்களை சிறைபிடித்து, கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை 70 வருஷம் அடிமைப் படுத்தி வைத்திருந்தது வரலாற்று உண்மை. அவன் சிறைப்பிடிக்க காரணம் யூதா மக்களின் பாவத்தினால் கடவுள் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் இரக்கம் நிறைந்த கடவுள் அவர்களை 70 வருஷம் கழித்து அவர்கள் நாட்டுக்கு திரும்பும் படி கிருபை அளித்தார். அவருடைய பிள்ளைகளை ஏதோ கோபத்தில் கொஞ்ச வருஷம் கைவிட்டாலும் அவரின் பேரன்பினால் மறுபடியும் அவர்களை சேர்த்துக்கொள்வார்.
நேபுகாத்நேசர் சிறைப்பிடித்தவர்களில் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்னும் 4 பேர்கள் ராஜ குலத்தை சேர்ந்தவர்களும், ஞானத்திலும், அறிவிலும், கல்வியிலும் தேறினவர்களாய் இருந்தார்கள். நேபுகாத்நேசர் அரசாண்ட 2ம் வருஷத்தில் அரசர் ஒரு கனவைக்கண்டு தனது உள்ளத்திலே திகைத்து அந்த கனவுக்கு அர்த்தம் சொல்லும்படி அந்நாட்டில் உள்ள மந்திரவாதிகளையும், மாயவித்தைக்காரரையும், சூனியக் காரர்களையும், ஜோசியரையும் அழைத்து வரும்படி கட்டளையிட்டு அவர்களிடத்தில் தான் கண்ட கனவை சொல்லாமல், கனவையும் அதோடு சேர்த்து அர்த்தத்தையும் சொல்லும்படு கட்டளை இடுகிறான். கனவுக்கு அர்த்தம் வேண்டுமானால் நாம் நம் மனதில் தோன்றியதை சொல்லி நம்மை பெருமை படுத்திக்கொள்ளலாம். ஆனால் இங்கு கனவையே சொல்லும்படி கட்டளை பிறந்ததால் எல்லோரும் திகைத்தனர். ஆனால் நம்முடைய கடவுள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
கனவை யாரும் சொல்லமுடியாது என்றும் ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை என்று மந்திரவாதி, ஜோசியக்காரன், சாஸ்திரி யாவரும் ராஜாவுக்கு பதிலாக சொல்வதால் ராஜா கோபம் கொண்டு அவர்களை அழிக்க உத்தரவு இடுகிறான். ஆனால் நம் தேவனோ மறைபொருளை அறிவிக்கத்தக்கவர். தானியேல் பரலோக தேவனை நோக்கி விண்ணப்பம் செய்து ராஜா கண்ட கனவையும், அதின் அர்த்தத்தையும் ராஜாவுக்கு வெளிப்படுத்துகிறான். ஏனெனில் நம் கடவுளே காலங்களையும், சமயங்களையும் மாற்றுகிறவர். ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் நம் தேவனே.
அன்பார்ந்தவர்களே! இப்படிப்பட்ட கடவுளை அறிந்திருக்கிற நாம் எத்தனை விதத்தவர்கள். அறிந்தவர்களோ: அறியாதவர்களோ நீங்கள் யாராயிருந்தாலும் தானியேல் புத்தகத்தை நன்கு வாசித்து அதின் ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். தானியேலுக்கு எப்படி கடவுள் ராஜா கண்ட கனவையே சொல்லும்படி கிருபை அளித்தாரோ நாமும் கடவுளிடம் கேட்டு அப்பேற்பட்ட கிருபையையும், ஞானத்தையும் அறிவையும் பெற்று அநேகருக்கு நாம் முன்மாதிரியாக வாழ்ந்து அவரின் திருநாமத்தை மகிமைப்படுத்துவோம். அதற்கு நாம் செய்ய வேண்டியது நாமும் தானியேலைப்போல் மூன்று வேளையும் வேதம் வாசித்து ஜெபம் செய்து ஆண்டவரின் மகிமையும், வல்லமையையும், பெற்றுக்கொள்வோம். கேட்கிற யாவருக்கும் ஆண்டவர் கொடுப்பார். நாம் எதற்காகவும் கவலைப்பட தேவை இல்லை. வானத்தையும், பூமியையும் படைத்த தேவன் நம்மோடு இருந்து ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
ஜெபம்
அன்பின் இறைவா! நாங்களும் தானியேல் போல ஜெபித்து இன்னும் எங்கள் விசுவாசத்தில் உறுதிப்பட உதவிச் செய்யும். எதைக் குறித்தும் கலங்காமல் தைரியமாகவும், நம்பிக்கையோடும் வாழ கிருபையை தாரும். உம்முடைய வல்லமையை புரிந்துக்கொள்ள உதவி செய்யும். நீர் விரும்பும் பாத்திரமாக வாழ கற்றுத்தாரும். உமது இதயத்துக்கு ஏற்றவர்களாக மாற்றும். துதி, கனம், மகிமை உமக்கே! உமக்கே ! ஆமென் !! அல்லேலூயா !!!.
(Written by – Sara, MyGreatMaster.com)