மறக்காதீ்ங்க! சொல்ல மறக்காதீங்க… ப்ளீஸ்!
லூக்கா 10:21-24
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஒருசில ஜெபங்களை நாம் உணர்ந்து சொல்லும்போது அது நம் உடல், மனம், ஆன்மாவிற்கான முழுபலனையும் தருகிறது. அந்த ஜெபத்தை சொல்லும்போது நம் உடலில் புதுசெல்கள் பிறக்கின்றன. அப்படிப்பட்ட மிக அருமையான ஜெபத்தை அறிமுகப்படுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அந்த ஜெபத்தை இரண்டு நேரங்களில் சொல்லும்போது அது அதிக பலன்களை பெற்றுத்தருகிறது.
நம் திறமைகளை வெளிப்படுத்திய பிறகு
நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பான காரியங்களைச் செய்த பிறகு நமக்கு ஒரு சந்தோசம் கிடைக்கும். அந்த வேளையில் நாம் நம்மைக் குறித்து பெருமிதம் கொள்ளாமல் இறைவனை நினைக்க வேண்டும். அதைத்தான் இயேசு நற்செய்தி வாசகத்தில் செய்கிறார். நாமும் அவரைப்போல சிறப்பான செயல்களை செய்த பிறகு தூய ஆவியால் பேருவகையடைந்து இப்படி சொல்லனும், ”தந்தையே, விண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து குழந்தையாகிய எனக்கு வெளிப்படுத்தினீரே! என்னை இந்த சிறப்பான செயல்களை செய்ய வைத்தீரே! என்னைப் பயன்படுத்தீனீரே! உம்மைப் போற்றுகிறேன். உமக்கு நன்றி கூறுகிறேன்”. இந்த ஜெபத்தை மறக்காமல் சொன்னால் இது இன்னும் கூடுதலான ஆசீரை நமக்கு பெற்றுத் தருகிறது.
அடுத்தவர் திறமைகளை வெளிப்படுத்திய பிறகு
நம் அருகிலிருப்பவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் இவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய பிறகு நாம் அவர்கள் திறமைகளுக்காக கடவுளைப் புகழ வேண்டும். அப்போதும் அந்த ஜெபத்தை இவ்வாறாக சொல்ல வேண்டும். ”தந்தையே, விண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து குழந்தையாகிய இவர்களுக்கு வெளிப்படுத்தினீரே! இவர்களை இந்த சிறப்பான செயல்களை செய்ய வைத்தீரே! இவர்களை பயன்படுத்தீனீரே! உம்மைப் போற்றுகிறேன். உமக்கு நன்றி கூறுகிறேன்”. இந்த ஜெபத்தை மறக்காமல் சொன்னால் இதுவும் இன்னும் கூடுதலான ஆசீரை நமக்கு பெற்றுத் தருகிறது. பிறர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும்போது நாம் வழக்கமாக பொறாமைப்படுவது உண்டு. அதை விடுத்து இதை செய்வோம். நம் மனநிலைகளை சீர்செய்வோம்.
மனதில் கேட்க…
நான் இந்த அருமையான ஜெபத்தை இனி தினமும் சொல்லுவேன் அல்லவா?
பிறர் திறமைகளை வெளிப்படுத்தும்போது நான் இந்த ஜெபத்தை சொல்லி இனி கடவுளைப் புகழ்வேனா?
மனதில் பதிக்க…
தந்தையே, விண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே! இதுவே உமது திருவுளம். (லூக்10:21)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா