மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்
மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்
தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்
லூக்கா 1:39-56
உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களையும், சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தித்திப்பான நாளிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன். விண்ணேற்பு அன்னை மரியின் பரிந்துரையும், ஆண்டவரின் ஆசீரும் உங்களுக்கு நிறைவாகவே கிடைப்பதாக!
இன்றைக்கு நம் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் விழா எடுக்கிறோம். இருவருக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் இருப்பதை நாம் பார்க்கலாம்.
தாய்க்கு எதற்காக?
ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.
– “அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – என்கிறார் புனித தமசீன் நகர அருளப்பர்.
– “ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” – என்கிறார் தூய அகுஸ்தினார்
– “வாழ்க! புனித அன்னையே, விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆள்கின்ற அரசரை ஈன்ற அம்மையே வாழ்க” – என்கிறது திருச்சபை
அன்னையின் பெருமை கோபுரம் போல் உயா்ந்தது, வானம் போல் பரந்தது, கடல் போல் ஆழ்ந்தது. அன்னையின் அன்பை எடுத்துரைக்க உலகில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் கிடைாது
தாய்நாட்டிற்கு எதற்காக?
நம் தாய்நாடு பிள்ளைகளாகிய நம்மை மிகவே அன்பு செய்கிறது. இந்தியா என் தாய்நாடு என்பதிலே இந்தியா்கள் நாம் பெருமை கொள்கிறோம். பெருமிதம் அடைகிறோம். அதனால் நாம் நம் தாய்நாட்டிற்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.
‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே!
பிள்ளைகள் எதற்காக?
– தாயையும் தாய் நாட்டையும் அன்பு செய்ய வேண்டும்
– இருவர் செய்த நன்றியையும் மறவாமல் நடக்க வேண்டும்
– இருவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்
மனதில் கேட்க…
1. என் தாய் அன்னை மரியாளுக்காக நான் செய்தது என்ன?
2. என் தாய்நாட்டிற்காக நான் செய்தது என்ன?
மனதில் பதிக்க…
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் (லூக் 1:48)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா