மரியாளின் விண்ணேற்பு
நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின்படி, பைசாண்டின் அரசில், மரியாளின் இறப்பு தினம், மிகப்பெரிய விழாவாக் கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்ட வாசக நூலும், அதன் ஆர்மீனிய மொழிபெயர்ப்பு நூலும், ஆகஸ்டு மாதம் 15 ம் நாளை, மரியாளின் விண்ணேற்பு நாளாக அறிவிக்கின்றன. இதுவே அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவிற்கான தொடக்ககால சான்றாகும்.
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் மரியாளின் வி்ண்ணேற்றம் என்ற திருமறைக்கோட்பாட்டை, நவம்பர் 1, 1950 ல் பிரகடனப்படுத்தினார். இது விசுவாசத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். திருவிவிலியத்தில் இறப்பு என்பது பாவத்தின் விளைவாகும். மரியாள் அமல உற்பவி என்பதால், அவள் பாவமின்றி பிறந்தவள். ஆகவே, மரியாள் பாவத்திற்கான விளைவை முறியடித்தவள். ஆதலால், மரியாளின் அமல உற்பவ பெருவிழாவானது, மரியாளின் விண்ணேற்றப் பெருவிழாவோடு நெருங்கிய இறையியல் தொடர்புடையது. மரியாள் பாவத்திலிருந்து விலிகியிருந்ததால், இறைவனின் மாட்சிமையில் பங்குபெற்றார்.
மரியாளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிற நாமும், அன்னை மரியாளைப்பின்பற்றி, பாவத்திலிருந்து விலகியிருப்போம். இறைவனின் மாட்சிமையில் பங்குபெற, நம்மையே புனித வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவோம்.
உதவி செய்வோம், ஆறுதலாக இருப்போம்
மரியா எலிசபெத்தம்மாளை சந்திக்கிற நிகழ்ச்சி இரண்டு கருத்துக்களை நமக்கு தருகிறது. முதல் கருத்து: கபிரியேல் தூதர் மரியாளை விட்டு அகன்றவுடன், மரியா புறப்பட்டு எலிசபெத்தம்மாளின் ஊருக்கு விரைந்து சென்றதாக லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கிறார்.
“விரைந்து” என்ற வார்த்தையை அழுத்தத்தைக் கொடுப்பதற்காக பயன்படுத்துகிறார். பொதுவாக, கருவுற்றிருக்கிறவர்கள் கரு உருவாகியிருக்கிற தொடக்கக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக வேலை செய்யக்கூடாது. பயணம் மேற்கொள்ளக்கூடாது. இங்கே மரியாள் கருவுற்றிருக்கிற அந்த நிலையிலும் கடுமையான பயணத்தை மேற்கொண்டதன் காரணம், எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்வதற்கு. தேவையில் இருக்கிறவர்களுக்கு “விரைந்து“ உதவி செய்ய மரியாளின் வாழ்வு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இரண்டாவது கருத்து: மரியாள் எலிசபெத்தம்மாளை வாழ்த்துகிறார். நம்முடைய நாவிலிருந்து வருகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு வாழ்த்துச்செய்தியாக, ஆறுதல் செய்தியாக ஊக்கப்படுத்துகிற செய்தியாக இருக்க வேண்டும். மனநிறைவைத்தருவதாக இருக்க வேண்டும். காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
காலை விழித்தெழுந்ததிலிருந்து இரவு தூங்கச்செல்லும்வரை எவ்வளவோ வார்த்தைகளைப்பயன்படுத்துகிறோம். நமது வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்கிறதா? என சிந்தித்துப்பார்ப்போம். நல்ல வார்த்தைகள் நம் நாவிலிருந்து வர பக்குவப்படுவோம், பக்குவப்படுத்துவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்