மயக்கமா? தயக்கமா?
மாற்கு 3: 20 – 21
சமுதாயத்தில் பிரபலமாக வளர்ந்து கொண்டிருப்பவர்களுடைய வாழ்வில் எப்போதுமே சற்று தயக்கம் இருக்கும், எப்போது நமது சொகுசு வாழ்விற்கு ஆபத்து வரும் என்று. ஏனென்றால் தாங்கள் சோ்த்து வைத்துள்ள அபரீதமான சொத்தால் நிச்சயம் ஆபத்து வரும் என்பது உறுதி. அது போல ஒருவன் அரசியலில் ஒரு வாழ்வினைக் கொண்டு வர முயலுகிறபோதும், மக்கள் மீது இருந்து வருகின்ற ஏழ்மை என்ற நாற்றத்தினால் மயங்கி ஆக்கப்பூர்வமாக பேசுகின்ற போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தயங்குகிறவன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான், மயங்குகிறவன் இந்த சமுதாயத்திலிருந்து புறந்தள்ளப்படுவான்.
இதனைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கிறோம். இயேசு தன் வாழ்வில் ஒருபோதும் தயக்கம் காட்டவில்லை. அவரைப் பலதரப்பட்ட மக்கள் பின்தொடர்ந்தார்கள். இவர் உணவு அளிப்பார் என்று ஒரு குழுவினர் பின்தொடர்ந்தனர். மற்றொரு குழுவினர் இவர் நம் வாழ்வில் ஏதாவது புதுமைகளைச் செய்வார் என்று பின்தொடர்ந்தனர். மற்றொரு வகையினர் இவர் நமக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தருவார் என்று பின்பற்றினர். இப்படிப்பட்ட மக்கள் மீது இருந்து வந்த அந்த ஏழ்மை, அடிமை, நோய், ஒடுக்கப்பட்டமை என்கிற நாற்றத்தினால் தான் அவர் மதிமயங்கி விடுகின்றார். இன்றைய சமுதாய பார்வையின்படி அவர் மதிமயங்கவில்லை. ஏனென்றால் அன்றைய சமுதாயத்தில் தச்சு வேலை என்பது அவ்வளவு மதிப்புமிக்கது, அந்த அளவிற்கு வருவாய் தரக்கூடியது. பிறகு எதற்காக அவர் மதிமயங்க வேண்டும்?
என்னோடு இருக்கின்ற நண்பர்கள் பசியினால் வாடும்போது நான் அவர்கள் மீது மயக்கம் கொண்டு, அவர்களுக்கு தெளிவு கொடுக்கிறேனா? அல்லது தயக்கத்தோடு ஒதுங்கிச் செல்கிறேனா? சிந்திப்போம். ஆண்டவரில் மயக்கம் கொள்வோம்.
அருட்பணி. பிரதாப்