மன மாற்றம்..
மக்கள் மனமாற்றம் பெறவேண்டும் என்று திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தி பண்டைக்காலத்தில் எசாயா இறைவாக்கினர் கூறிய செய்தியை எதிரொலிக்கிறது. ”ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” (காண்க, எசா 40:3) என எசாயா அன்று கூறியது பாபிலோனிய அடிமைநிலையிலிருந்து மக்கள் விடுதலை பெற்ற நல்ல செய்தியை முன்னறிவித்தது. உண்மையிலேயே அது ஒரு புதிய ”விடுதலைப் பயணமாக” அமைந்தது. யோவான் பாலைநிலத்தில் ஒலிக்கின்ற குரலாக வந்தார்; வரவிருக்கின்ற மெசியாவின் வருகையை அறிவித்தார். உண்மையிலேயே அவர் கடவுளின் குரலாகச் செயல்பட்டார். அதே நேரத்தில் அவர் மணமகனாகிய இயேசுவின் தோழனாகச் செயல்பட்டு அம்மணமகனைப் பாலைநிலம் வர அழைக்கும் குரலானார்.
யோவான் அறிவித்த மனமாற்றம் எதில் அடங்கியிருக்கிறது? தவறான வழியில் செல்வோர் தாங்கள் செல்ல வேண்டிய வழி இன்னொன்று என்று தெரிந்ததும் உடனே திரும்பி சரியான வழியில் நடக்கத் தொடங்குவர். இதையே யோவான் மக்களிடம் கேட்டார். எனவே மனமாற்றம் என்பது தவற்றைக் களைந்து நல்லதைத் தழுவுவது என்னும் பொருள்கொண்டது. மனமாற்றம் என்பது தவறான கருத்துக்களைக் கைவிட்டுவிட்டு நேர்மையான கருத்தினைத் தனதாக மாற்றிக்கொள்வது, வாழ்க்கை முறையை மாற்றுவது என்றும்பொருள்படும்.
யோவான் எதிர்பார்த்த மனமாற்றம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழ வேண்டிய ஒன்று. வெறுமனே வெளிச் சடங்காகச் செயல்கள் செய்வது கடவுளுக்கு ஏற்றதாகாது. மாறாக, உள்ளத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். தவறான பார்வைகளை ஒழித்துவிட்டு, புதிய மன நிலையை நம்மில் உருவாக்க வேண்டும். எனவே வெளிச்சடங்குகளை மட்டுமே மதித்தவர்களை யோவான் ”விரியன் பாம்புக் குட்டிகளே” எனச் சீறினார். ”ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் நாங்கள்” என்று பெருமைப்படுவதற்கு இடமில்லை.
பாலைநிலத்தில் யோவான் விடுத்த அறைகூவல் நமக்கும் விடுக்கப்படுகிறது. ”கோதுமையையும் பதிரையும் பிரித்தெடுக்கின்ற சுளகு” (மத் 3:12) கடவுளின் கையில் இருக்கும்வரை நாமும் பதிராக மாறிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, கடவுளிடம் மனம் திரும்பிச் சென்று, அவருடைய வழிகளைத் தயார் செய்து, ”பாலைநிலத்தில்” அவர் வரும்போது அவரை எதிர்கொள்ள நாம் முன்வர வேண்டும். இது திருவருகைக் காலம் நமக்கு விடுக்கும் அழைப்பும்கூட.
–அருட்திரு பவுல் லியோன்