மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இந்த உலகத்தில் நடக்கப்போகும் காரியங்களை தமது சீடர்களுக்கு அறிவித்தார். அதற்கு அவர்கள் இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு நானே அவர், என்றும் காலம் நெருங்கி விட்டது என்றும் கூறுவார்கள்:அவர்கள் பின்னே போகாதீர்கள்.
போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் முடிவு உடனே வராது என்றார். நாட்டை எதிர்த்து நாடும்,அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியன ஏற்படும். அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்களும், வானில் தோன்றும் இவைகள் நடப்பதற்கு முன் உங்களைப்பிடித்து துன்புறுத்துவார்கள். தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வர். சிறையில் அடைப்பார்கள் என்று லூக்கா 21:8 to 12 வரை உள்ள வசனங்களில் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் நாம் இவைகளைக் கண்டு ஒருபோதும் பயப்படாமல் மனஉறுதியோடு இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்டவர் அந்நேரத்தில் நம்மோடு இருந்து நாம் என்ன பதில் அளிப்பது என நமக்கு சொல்லி தருவார். அச்சமயத்தில் அவரே நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும், கொடுப்பார். நம்முடைய எதிரிகள் ஒருவராலும் எதிர்த்து நிற்கவும் எதிர்த்து பேசவும் முடியாதபடி செய்வார். அவரின் பெயரை பொருட்டு எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். ஆயினும் நம் தலையில் உள்ள ஒருமுடியாவது விழவே விழாது. நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்வோம்.
நாம் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும்,சோதனையினாலும் மந்தம் அடையாதவாறு எச்சரிக்கையாய் இருந்து நிகழப்போகும் அனைத்து காரியத்துக்கும் தப்புவிக்கும்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் மன்றாடி நம்முடைய ஆத்துமாவை ஆபத்துக்கு காத்துக்கொள்வோம்.
ஜெபம்
அன்பின் தேவனே! நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். உம்முடைய பிள்ளைகளை நீர் ஒருபோதும் கைவிடுவதே இல்லை. நீரே எங்களுக்கு போதித்து வழிநடத்துகிறீர். நாங்கள் பேசவேண்டிய ஞானத்தையும், அறிவையும் தருகிறீர். ஆகையால் நாங்கள் உமது பாதத்தில் எங்களை அர்ப்பணித்து உமது சித்தப்படி செய்து உமக்கே பயந்து, கீழ்படிந்து எங்களை தாழ்த்தி ஜெபிக்கிறோம். நீரே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறீர். நாங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் உம்மையே நம்பியிருக்கிறோம். எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும், நல்வழிப்படுத்தும், ஆசீர்வதியும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!.