மன்னிப்பின் அர்த்தம்
மன்னிப்பு என்பது பொதுவான சூழ்நிலைகளில் புரிந்து கொள்வதற்கு கடினமான வார்த்தை. இன்றைக்கு செய்யக்கூடாது எல்லாச்செயல்களையும் செய்துவிட்டு, ”இயேசு மன்னிக்கச் சொல்லியிருக்கிறார், நீங்கள் மன்னியுங்கள்” என்று சொல்கிற, தவறான போக்கு தான், மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. இது இயேசு சொல்கிற மன்னிப்பை, களங்கப்படுத்தக்கூடிய வார்த்தைகளாக இருக்கிறது.
மன்னிப்பு என்கிற வார்த்தையைப் பேசுவதற்கு முன்னால், “மனமாற்றம்“ என்கிற வார்த்தை, அதிகமாகப் போதிக்கப்பட வேண்டும். மன்னிப்பு என்பது ஏதோ மானியம் அல்ல. அது ஒரு கொடை. பெறுதற்கரிய கொடை. மன்னிப்பு என்பது மலிவுச்சரக்காகப் பெறக்கூடிய அல்ல. அதனை அடைவதற்கு, முழுமையான மனமாற்றம் தேவை. மன்னிப்பை வெகுசொற்பமாக வாங்கிவிடலாம், என்கிற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அந்த நினைப்பு தான், மக்கள் மன்னிப்பு பற்றிய தவறான சிந்தனைகள் உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உண்மையான மனமாற்றம் தான், மன்னிப்பைப் பெறுவதற்கான சரியான தகுதியை நமக்குக் கொடுக்கும். அந்த மனமாற்றத்தைத்தான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
நாம் கடவுளிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்ப்பது போல, உண்மையான மனமாற்றத்தோடு நமக்கு எதிராக தீங்கு செய்தவர்கள் வருகிறபோது, நாம் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அது எளிதல்ல. ஆனால், கடவுள் நம்மை வழிநடத்துவார். கடவுள் நமக்கு தேவையான அருளைத்தருவார்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
Amen