மன்னிக்கும் மனதைப்பெற….
பாவங்களை நாம் மூன்று வகையாகப் பார்க்கலாம். நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்கள் முதல் வகை. கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால், நாம் நன்றியுணர்வு இல்லாமல், அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் பலவேளைகளில், அவருக்கு எதிரான காரியங்களில் இறங்கியிருக்கிறோம். அவை கடவுளுக்கு எதிரான பாவங்கள். இரண்டாவது, நம்மோடு வாழக்கூடிய நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடிய பாவங்கள். நாம் மட்டும் தான் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தோடு நாம் செய்யக்கூடிய பாவங்களை இந்த வகையில் உள்ளடக்கலாம். மற்றவரைப்பற்றி கவலைப்படாமல், நமது வாழ்வு, நமது குடும்பம் என்ற குறுகியமனப்பான்மை நம்மை பாவத்திற்கு அழைத்துச் செல்கிறது. மூன்றாவது வகையான பாவம், மற்றவர்கள் நமக்கு எதிராகச் செய்வது. நாம் சுயநலத்தோடு இருப்பது போல, மற்றவர்களும் சுயநலத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்பொருட்டு, நமக்கு எதிராக பாவம் செய்கிறார்கள்.
இதிலே, நற்செய்தியில் நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்களையும், மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்களையும் ஒப்பிடுகிறார்கள். நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்களை, மற்றவர்கள் நமக்கு எதிராக செய்கிற பாவங்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு, நாம் அதிகமான பாவங்களைச் செய்கிறோம். ஆனால், கடவுள் தந்தை உள்ளத்தோடு, நம்மை ஏற்றுக்கொண்டு அன்பு செய்யக்கூடியவராக இருக்கிறார். ஆனால், பிறர் நமக்கு செய்யக்கூடிய சாதாரண குற்றங்களையும் நாம் மன்னிக்க மனம் இல்லாதவர்களாக இருக்கிறோம். எனவே, இயேசு கடவுள் நமது பாவங்களை மன்னிக்க வேண்டுமென்றால், நாம் அவர்களது பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று, கண்டிப்புடன் சொல்கிறார்.
நமது வாழ்வில் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யக்கூடிய சிறிய, சிறிய பாவங்களை மன்னிக்கக்கூடிய அளவிற்கு, என்னையே பக்குவநிலைக்கு உட்படுத்தியிருக்கிறேனா? என்னை கடவுள் புரிந்து கொள்ள வேண்டும், என்று நினைக்கிற நான், மற்றவர்களைப் புரிந்து கொள்கிறேனா? சிந்திப்போம். தவக்காலத்தில், யூபிலி ஆண்டில் நமது பாவங்களை மன்னிக்க கடவுளிடம் வேண்டுவோம். மற்றவர்களின் தவறுகளை மன்னிக்க முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்