மனுக்குலத்துக்கே அரசனாகிய இயேசுகிறிஸ்து சாரோனின் ரோஜா.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
சுமார் 800 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரசி இவ்வாறு எழுதி வைத்துள்ளார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விருப்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்.வேதனையுற்ற மனிதராய் இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவு படுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை.நம் துன்பங்களை சுமந்துக்கொண்டார்.நமக்காக சிறுமை படுத்தப்பட்டார்.அவரே நம் குற்றங்களுக்காக காயமடைந்தார்.நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்.நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவருடைய காயங்களால் நாம் குணமடைகிறோம்.நாம் ஆடுகளைப்போல் வழி தவறி அலைந்தோம்,ஆனால் கடவுளோ நம் அனைவரின் தீச்செயல்களுக்காக அவரை காயப்படுத்தினார்.அடிப்பதற்கு இழுத்து செல்லும் ஆட்டைப்போலவும்,ரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போல் தமது வாயை திறவாமல் நம்முடைய பாவங்கள்,சாபங்கள்,அக்கிரமங்கள்,யாவையும் சுமந்தார்.
சாரோனின் ரோஜாவாய்,பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமுமாயிருந்த அவர்,வாழ்நாள் முழுதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டுக் கிடந்த நம்மை விடுவிக்க அடிமையின் கோலம் எடுத்து சிலுவையில் தொங்கினார்.அவரை நேசித்து அவர்மேல் நம்பிக்கை வைத்த யாவரையும் மீட்கும் வண்ணமாகவும்,நம்மேல் வைத்த அன்பின் பொருட்டாகவும் தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு வைத்து தமது மகன் வழியாக நம்மை மீட்க அவரை உலகத்திற்கு அனுப்பினார்.
ஜாதி,இன,மத வேறுபாடின்றி எல்லோரும் அவர் மூலமாக நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள வேண்டுமாய் அவர் சிலுவையில் உயிர் விட்டவுடனே திருக்கோயிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாக கிழிந்தது.நிலம் நடுங்கியது.பாறைகள் பிளந்தன.கல்லறைகள் திறந்தன.இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் எழுந்தன..அவர்களின் கல்லறைகள் திறந்தன.அநேகர் உயிரோடு எழுந்தனர்.இதைப்பார்த்துக்கொண்டு இருந்த நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும், நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி இவர் உண்மையாகவே இறைமகன் என்றார்கள்.
அவரின் உடலை அடக்கம் செய்து கல்லறையை காவல் காத்தார்கள்.அவரின் மகிமையையும் மகத்துவத்தையும் அன்பையும் அலட்சியப்படுத்தினார்கள்.கல்லறை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு கருத்தாய் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.சாவை வென்றவரை மூடி வைக்க முடியாது என்று ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை.மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்களின் மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என இயேசு சொன்னதை அவர்கள் உணரவில்லை.மனுக்குலத்தை மீட்க வந்தவரை தடுக்க இயலாது என்று இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் புரிந்துக்கொள்ள வேண்டுமாய் நாமும் அவர்களுக்காக பிரார்த்தனை ஏறெடுப்போம்.
ஜெபம்.
அன்பின் இறைவா!நீர் எங்களை மீட்க உம்மையே தியாகப் பலியாக ஒப்புக்கொடுத்தீர் .உம்முடைய சத்தத்தை ஒவ்வொரு ஆத்துமாவும் கேட்கும்படி செய்து உம்மண்டை இழுத்துக்கொள்ளும்.உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க செய்து கிருபை அளித்திடும்.உமது முகத்தை எங்கள்மேல் பிரசன்னமாக்கி எங்களுக்கு சமாதானத்தை கட்டளையிடும்.உம்மை காட்டிக்கொடுத்த யூதாஸ் போல இல்லாமல் உம்மை மறுதலித்த பேதுருவைப்போல் இல்லாமல் உமக்கு உண்மையாய் இருந்து நீர் காட்டும் வழியில் நடந்து உமக்கே மகிமை உண்டாக உதவி செய்தருளும்.உம்மை விசுவாசிக்கிறவர்கள் மரித்தாலும் பிழைப்பார்கள்.நீரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறீர்.உம்மிடம் எங்கள் ஆவி,ஆத்துமாவை சமர்ப்பிக்கிறோம்.இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டி நிற்கிறோம் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.