மனித எண்ணம்
இன்றைய நற்செய்தியில் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27) சதுசேயர்கள் சொல்வது இணைச்சட்டம் 25: 5 – 10 முதல் காணப்படக்கூடிய பகுதியாகும். இந்த சட்டத்திற்கான நோக்கம் இரண்டு: முதலாவதாக, வம்சம் தொடர வேண்டும். இரண்டாவதாக, சொத்துக்கள் வம்சத்தோடு இருக்க வேண்டும். அது கையைவிட்டு போகக்கூடாது என்பதுதான். இந்த அடிப்படையில்தான், இந்த சட்டம் இயற்றப்பட்டது. உயிர்ப்பு என்பதை, சதுசேயர்கள் நம்பாததால், அதை ஒரு கேலிப்பொருளாக, இயேசுவிடம் அவர்கள் பரிகசிக்கிறார்கள். ஆனால், இயேசு இந்த வாய்ப்பைப்பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு உயிர்ப்பு பற்றிய சரியான புரிதலை கொடுக்கிறார்.
உயிர்ப்பு என்பதை நமது இந்த உலக வாழ்வோடோ அல்லது நமது மனித எண்ணத்தின்படியோ நாம் சிந்திக்கக்கூடாது, என்பது இயேசு தரும் முதல் விளக்கம். நாம் அனைவருமே வானதூதர்களைப்போல இருப்போம். கத்தோலிக்கத் திருச்சபையால், ஏவப்பட்ட நூல் என்று கருதப்படாத, ஏற்றுக்கொள்ளப்படாத புத்தகத்தில், நேர்மையாளர்கள், வானதூதர்கள் போல கருதப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. யூதப்போதகர்களின் விளக்கநூலில், உயிர்ப்பு என்பது கடவுளின் மாட்சிமையில் பங்குகொள்ளக்கூடிய வாழ்க்கை என்றும், உயிர்ப்பில் பொறாமையோ, வெறுப்போ, வைராக்கியமோ இருக்காது என்று விளக்கம் தரப்படுகிறது. இயேசு தரும் இரண்டாவது விளக்கத்தில், உயிர்ப்பிற்கான ஆதாரத்தைத்தருகிறார். விடுதலைப்பயணம் 3: 6 ல், கடவுள் தன்னை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுளாகக் குறிப்பிடுகிறார். அவர் மூதாதையர்களின் கடவுள் என்றால், ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் இன்னும் வாழ்கிறார்கள் என்பதுதான் பொருள். ஆக, அவர் வாழ்வோரின் கடவுள்.
சதுசேயர்கள் இந்த உலகத்தைப்போல விண்ணகத்தையும் கற்பனைசெய்து பார்க்கிறார்கள். மனித அறிவைக்கொண்டு, அனைத்தையும் அறிந்துவிடலாம், அனைத்திற்கும் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது மிகப்பெரிய தவறு என்பதை, இன்றைய நற்செய்தியின் மூலம் இயேசு நமக்கு விளக்குகிறார்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்