மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்
திருப்பாடல் 119: 2, 10, 20, 30, 40, 131
வாழ்க்கை என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல. அது தன்னையே முழுமையாக ஈடுபடுத்தி, மற்றவர்களை இயக்க வைப்பது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களும் தங்களது வாழ்வை வாழ்ந்திருக்கிறார்களா? என்றால், அது நிச்சயம் கேள்விக்குறிதான். எல்லாரும் வாழவில்லை. ஆனால், இந்த உலத்தில், குறிப்பிட்ட காலம் “இருந்திருக்கிறார்கள்“. வாழ்க்கை என்பது அதனையும் கடந்த ஓர் அா்ப்பணம். வாழ்க்கையை உண்மையிலேயே வாழ்ந்தவர்களைத்தான் இந்த உலகம் வரலாற்றில் குறித்து வைத்திருக்கிறது. மற்றவர்களை அது நினைவுகூர்வதில்லை.
இந்த உலகத்தில் வெறுமனே இருப்பதற்கு, உணவு போதுமானது. ஆனால், இந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், நமக்கு கடவுளின் வார்த்தை அவசியமானதாக இருக்கிறது. அது நமது வாழ்வை நாம் வாழ்வதற்கு உந்துசக்தியாக இருந்து, நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் சோர்வடைகிற வேளையில், நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நம்மையே முழுவதுமாக மற்றவர்களுக்கு அர்ப்பணித்து உழைக்கிறபோது, நமக்கு அது உந்துசக்தியாக இருந்து, நம்மை இயக்கிக் கொண்டேயிருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், சிறப்பான ஒரு வாழ்க்கையை இயேசுவால் வாழ முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவர் இறைவார்த்தையின் மீது வைத்திருந்த ஆழமான நம்பிக்கை தான் காரணம். நாமும் இறைவார்த்தையின் மீது உண்மையான தாகமுள்ளவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
இந்த வாழ்க்கையை முழுவதுமாக வாழ்வதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். வெறுமனே இந்த உலகத்தில் இருந்து விடாமல், எதையாவது சாதிக்க வேண்டும், இந்த உலகம் என்னால் பயன்பெற வேண்டும் என்கிற தீராத ஆர்வத்தில், நாம் நமது வாழ்வை வாழ முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்