மனிதர் அனைவரும் கடவுளின் மீட்பைக் காண்பர் !
இத்திருவருகைக் காலத்தில் இயேசுவின் இரண்டு வருகைகளையும் நாம் சிந்திக்கின்றோம். முதல் முறை வந்த மனுவுருவான நிகழ்வை மகிழ்ச்சி மிக்க கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாட ஆவலோடு இருக்கிறோம். அத்துடன், அவரது இரண்டாவது வருகை ஒரு நடுவரின் வருகையாக, தீர்ப்பின் வருகையாக இருக்கப் போகிறது. அதற்காக நாம் எப்போதும் விழிப்பாக, ஆயத்தமாக இருக்க வேண்டும் என்னும் உணர்வையும் இத்திருவருகைக் காலத்தில் பெறுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் இறையாட்சிக் கனவைப் பறைசாற்றுகிறது. இது யோவானின் கனவு மட்டுமல்ல, இறைமகன் இயேசுவின் கனவு, அவரது தந்தையாம் இறைவனின் கனவு. இறைவனின் வருகைக்காக அகத்திலும், புறத்திலும் ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட வேண்டும். மலை, குன்றுகள் தாழ்த்தப்பட வேண்டும். கோணலானவை நேராக்கப்பட வேண்டும். கரடுமுரடானவை சமதளமாக்கப்பட வேண்டும். இந்த சமுதாயத்தின் மேடு, பள்ளங்கள், முரண்பாடுகள் அனைத்தும் சீராக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காணவேண்டும். எல்லாருக்கும் இறையன்பு பரவலாக்கப்பட வேண்டும். கடவுளின் பரிவை, பாசத்தை அனைத்து மானிடரும் அனுபவிக்க வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற திருமுழுக்கு யோவான் நம்மை அழைக்கிறார். நாம் சந்திக்கின்ற அனைவருக்கும் இறைவன் நல்லவர், பரிவும் மீட்பும் தருபவர் என்னும் செய்தியை நாம் அறிவிப்போமா?
மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, உமது இரண்டாம் வருகைக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கச் செய்தருளும். நாங்கள் மனம் திரும்பி பாவ மன்னிப்பு பெறுகின்ற அருளைத் தந்தருளும். மேலும், மாந்தர் அனைவரும் உமது மீட்பைக் கண்டடையும் பாதைகளாக, சாட்சிகளாக நாங்கள் வாழ எங்களுக்குத் துhய ஆவி என்னும் கொடையைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா