மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா !
திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார்.
இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம்.
மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா