மனிதத்தின் புனிதம்
மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் படைப்பின் உயர்ந்த சிகரம். இன்று மனிதர்களையும் சாதாரண படைப்பாக நாம் நினைத்துவிட முடியாது. காரணம், அவர்கள் கடவுளின் அன்பினின்று படைக்கப்பட்டவர்கள். அதற்கும் மேலாக, கடவுளே மனிதர்களில் ஒருவராக பிறந்து, இந்த மனிதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இன்றைய வாசகம், மனிதத்தின் புனிதத்தன்மையை நமக்கு பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு வாழ்வை வாழக்கூடிய மனிதர்கள் ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானுட வாழ்வின் முக்கியத்துவம் தெரிவதாக இல்லை. எனவே தான், கொலை, தற்கொலை என்று, மனிதத்திற்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மனிதம் என்பது போற்றுதற்குரியது. மனிதம் என்பது உயர்ந்த மதிப்பீடுகளைக்கொண்டு வாழப்பட வேண்டியது. அத்தகைய மனித வாழ்வை நாம் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
மனிதத்தின் புனிதத்தன்மையை நாம் உணர்வதற்கு ஒவ்வொருநாளும் முயற்சி எடுக்க வேண்டும். கடவுள் இந்த மனித உருவத்தை எடுத்து, இதற்கு மகிமை சேர்த்திருக்கிறார். இதனுடைய புனிதத்தன்மையை வாழ்ந்துகாட்டியிருக்கிறார். நாமும் அதனை நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்