மனம் மாற்றமும், நற்செய்தியை நம்புதலும் !
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1: 12-15) “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்தவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்னும் இயேசுவின் அழைப்பைக் கேட்கிறோம்.
இது இயேசுவின் பொதுவான அழைப்பாக இருந்தாலும், இத்தவக்காலத்திற்கான சிறப்பான அழைப்பு. மனம் மாறுவது நற்செய்தியை நம்புவது என்னும் செய்தியில் நமது கவனத்தைச் செலுத்துவோம். இயேசுவின் அழைப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது:
1. மனம் மாறவேண்டும்.
2. நற்செய்தியை நம்பவேண்டும்.
நமது பாவச் செயல்கள், தீய மனநிலைகள், இறைவனுக்கெதிரான வாழ்வு இவற்றை விட்டுவிடுவது என்பது அழைப்பின் முதல் கட்டம். இது கடினமானது. ஆனால், அழைப்பின் இரண்டாம் கட்டம் நற்செய்தியை நம்புவது. அதாவது, தீய செயல்களை விட்டுவிடுவது மட்டும் போதாது. இயேசுவின் நற்செய்தியை நம்பவேண்டும். அதாவது, இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு. அவரை அன்பு செய்து, அவருக்காகவே வாழவேண்டும். இதுவே நற்செய்தி வாழ்வு. இதுவே நற்செய்தியை நம்புவது.
இத்தவக்காலத்தில் தீய செயல்களை விட்டுவிடுவோம். இறைவன்மீது நமக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தி, அவரிடம் நெருங்கி வருவோம்.
மன்றாடுவோம்: மனமாற்றத்திற்கான அழைப்பு விடுக்கும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது அழைப்பை ஏற்று, மனம் மாறவும், நற்செய்தியை நம்பி, உம்மிடம் நெருங்கி வரவும் அருள்தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ பணி குமார்ராஜா