மனம்மாற அழைப்புவிடுக்கும் புதுமைகள்
இன்றைக்கு ஏராளமான புதுமைகளும், அற்புதங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. திருப்பலியில் அப்பம், இயேசுவின் திரு உடலாக மாறக்கூடிய புதுமை, கன்னி மரியாளின் காட்சிகள், புனிதர்களின் பரிந்துரைகள் மூலமாக நோயாளிகள் குணமாகக்கூடிய புதுமைகள் என ஏராளமான புதுமைகள் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இந்த புதுமைகளின் நோக்கம் என்ன? எதற்காக புதுமைகள் நடக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கு விடையாக வருவது தான், இன்றைய நற்செய்தி வாசகம்.
புதுமைகள் என்பது ஒருவரின் ஆற்றலை வெளிப்படத்தக்கூடியது அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை வெளிப்படக்கூடிய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு, கடவுள் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காக அல்ல. கடவுளின் இரக்கத்தை நாம் அதிகமாகப் புரிந்து கொள்வதற்காக. நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்காகத்தான் புதுமைகள் நடந்தேறுவதாக இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அறிய வருகிறோம். திருந்த மறுத்த நகரங்களில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அந்த புதுமைகள் கடவுளின் இரக்கத்தைக் குறித்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட புதுமைகள். மக்கள் கடவுளை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நிகழ்த்தப்பட்ட புதுமைகள். ஆனால், என்ன காரணத்திற்காக அந்த புதுமைகள் செய்யப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாத காரணத்தினால், இயேசு வருத்தமடைகிறார். அந்த வருத்தத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
இன்றைக்கு புதுமைகளும், அற்புதங்களும் நடக்கிறபோது, நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. மனம் மாறுவதற்கான முயற்சியை நாம் எடுப்பதில்லை. நாமும் கொராசின் நகர மக்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் நம்மைப்பார்த்தும் வருத்தமடைவார். வாழ்வை மாற்ற முயற்சி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்