மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்
திருப்பாடல் 112: 1ஆ – 2, 4 – 5, 9
கடந்த மாதத்தில் திருநேல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் இறந்த குடும்பத்தினரின் இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏழை, எளியவர்களின் வறுமையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அநியாய வட்டி வாங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது இன்றைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதற்கு துணைபோவது கலியுகத்தின் உச்சகட்டம். இப்படியிருக்கிற சூழ்நிலையில் இன்றைய திருப்பாடல், ”மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்” என்று சொல்கிறது.
கடன் என்பது ஒருவரது இக்கட்டான சூழ்நிலையில் நாம் பணமாகவோ, பொருளாகவோ கொடுத்துச் செய்கிற உதவி. இந்த கடன் கொடுப்பது எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இன்றைக்கு கடன் கொடுப்பது வியாபார நோக்கத்திற்கானதாக இருக்கிறது. அது ஒரு வியாபாரம். உனக்கு நான் பணம் தருகிறேன், எனக்கு நீ அதற்கான கூலியைக் கொடுத்து விட வேண்டும் என்பது தான் வியாபார கடன். ஆனால், கடன் என்பது “மனமிரங்கிக்“ கொடுப்பதாக இருக்க வேண்டும். அப்படி மனமிரங்கி கொடுக்கிற கடன் தான், அந்த மனிதருக்கு நன்மையைப் பெற்றுத்தருமேயன்றி, வியாபார நோக்கோடு கொடுக்கப்படுகிற கடன், என்றைக்குமே அழிவைத்தான் தரும். கடன் கொடுப்பதற்கு வசதி இருந்தால், அதனை தாராளமாகவே கொடுக்கலாமே! கடவுள் இந்த உலகத்தை அனைவருக்குமான உலகமாககத்தான் படைத்தார். ஒரு சில சுயநலவாதிகளால் இப்படிபட்ட மோசமான ஏற்றத்தாழ்வுகள் இந்த உலகத்தில் புகுந்துவிட்டன. அடுத்தவர்களைப் பற்றி தூய்மையான எண்ணமே, இதனை நிச்சயமாக மாற்றும்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை இந்த திருப்பாடல் நமக்குள்ளாக விதைக்கிறது. அப்படி நாம் செய்கிற உதவி, எந்த பலனையும் எதிர்பார்க்காது தூய்மையான சிந்தனையோடு செய்ய வேண்டும். அப்போதுதான் கடவுளின் உன்னதமான கொடையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்