மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வோம்.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாம் பார்க்கும் பொழுது எத்தனை அதிர்ச்சியான காரியங்கள் நம்மை சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது. நாம் தாயின் வயிற்றிலிருந்து வரும் பொழுது ஒன்றும் கொண்டுவரவில்லை.இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது நம்முடைய உழைப்பின் சம்பாத்தியம் எதையும் கொண்டு போக போவதுமில்லை. இது கொடிய தீங்காகும். நாம் எப்படி வந்தோமோ அப்படியே போகிறோம். என்னென்னமோ செய்ய திட்டமிடுகிறோம். ஆனாலும் ஒரு பயனும் இல்லை. வாழ்நாள் முழுதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம். ஆகையால் நாம் கடவுள் நமக்கு வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் தம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம். அதுவே தகுந்ததுமாகும் என்று சபைஉரையாளர் 5:15,18 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.
இந்தநாளிலும் நாம் செய்திகளில் நேபால் நாட்டில் நடந்த பூமி அதிர்ச்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை காண்கிறோம்.இதன்மூலம் ஆண்டவர் உயிரோடு இருக்கும் நமக்கு ஒரு எச்சரிப்பை உண்டு பண்ணுகிறார். நாம் லூக்கா 13 ம் அதிகாரத்தை வாசிக்கும்பொழுது இயேசுகிறிஸ்து அங்கு ஒரு காரியத்தை நமக்கு விளக்கியுள்ளார். சிலர் இயேசுவிடம் வந்து பலி செலுத்திக்கொண்டு இருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அப்பொழுது இயேசு அவர்களிடம் மறுமொழியாக இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என
உங்களுக்கு சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லோரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்கு சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் என்று சொல்வதாக [லூக்கா 13:1 to 5] வாசிக்கிறோம். இதைப்போல் தான் இன்று நேபால் மற்றும் இந்தியாவில் பீகார், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் நமக்கு ஒரு எச்சரிப்பை கடவுள் உண்டு பண்ணுகிறார். ஆண்டவரை அறியாத மக்கள் யாவரும் அவரை அறிந்துக்கொள்ள வேண்டுமாய் ஜெபிப்போம். அப்பொழுது ஒருவேளை ஆண்டவர் மனமிரங்கி இந்த மாதிரியான பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுவார். நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டதோடு மற்றும் அல்லாமல் மற்றவர்களும் அந்த நிச்சயத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாய் ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடுவோம்.
நாம் ஆண்டவருக்கு பிரியமாய் வாழ நினைத்தால் மற்றவர்களின் துன்பத்தை நம் துன்பமாக கருதி அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்து அவரின்
அடிச்சுவட்டை பின்பற்றி நடந்து அவரின் சாயலை வெளிப்படுத்துவோம்.ஆண்டவரின் கோபம் இந்த பூமியில் பற்றி எரியாமல் அவரின் பாதங்களை முத்தமிட்டு மற்றவர்களுக்கு மனமிரங்கும்படி இயேசுவிடம் விண்ணப்பம் செய்வோம். நம்முடைய அனைவரின் ஜெபத்தையும் கேட்கும் ஆண்டவர் எல்லோர்மீதும் மனதுருகி,தாம் செய்ய நினைத்த தீமைகளை செய்யாதபடிக்கு நினிவே மக்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் மற்றவர்களுக்கும் தமது இரக்கத்தையும்,பேரன்பையும் காட்டும்படிக்கு கெஞ்சுவோம். எங்கே இரண்டு,மூன்று பேர் இந்த பூமியில் ஒருமனப்பட்டு ஆண்டவரிடம் ஜெபித்தோமானால் அங்கே ஆண்டவர் பிரசன்னமாகி நமது ஜெபத்தைக் கேட்டு நிச்சயம் மனம் இரங்குவார். நம்மையும் எந்த தீங்கும் தொடாதபடிக்கு காத்தருள்வார் ஆசீர்வதிப்பார். நம்மை நாம் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது ஆண்டவருக்கு உகந்த பிரியமான செயலாகும்.
ஜெபம்.
அன்பே உருவான இறைவா! உம்மை போற்றுகிறோம். துதிக்கிறோம். தகப்பனே நாங்கள் யாரிடம் செல்வோம். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தை உம்மிடம் தானே உள்ளது. நீர் எங்கள் பாவங்களை ஒவ்வொரு நாளும் மன்னித்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாங்கள் அழிந்து போகும் குப்பைக்கு சமமாக இருப்போம். நாங்கள் அறியாமல் தெரியாமல் செய்யும் பாவத்தியும், சாபத்தையும் ஒவ்வொரு நாளும் மன்னித்து உமது கிருபை எப்பொழுதும் எங்களை சூழ்ந்துக் கொள்ளும்படி செய்யும். இந்த உலகில் எந்த நாட்டில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் நீரே ஆண்டவர் என்று இந்த பூமியின் குடிகள் யாவரும் அறிந்துக்கொள்ளும்படி செய்யும். உலகம் உண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவிக்காத மிகுந்த உபத்திரவம் உண்டாகும் என்று நீர் சொல்லியிருக்கிறீர். இயேசப்பா அந்த ஒவ்வொரு கஷ்டத்திலும், துன்பத்திலும் நாங்கள் அழிந்து போகாதபடிக்கு எங்களை நீரே காத்துக்கொள்ளும். உமது இரத்தத்தைகொடுத்து எங்களை மீட்டுள்ளீர். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீரே கூட இருந்து உதவி செய்யும். பாவங்களை பொறுத்தருளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம். எங்கள் பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.