மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் மாறுவோம்.
அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
இந்த உலகில் இயேசு வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்கள் இயேசுவை அணுகி விண்ணரசில் யார் பெரியவர் என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். இந்த சிறு பிள்ளையைப்போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர்.இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை என் பெயரால்ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று மத்தேயு 18:1 to 5 வரை வாசிக்கிறோம். நாமும் இந்நாளில் ஆண்டவர் விரும்பும் வண்ணம்நாமும் ஒரு சிறுகுழந்தையைப் போல் மாறுவோம்.
அப்பொழுது நம் ஆண்டவர் நம்மை உயர்ந்த கன்மலையின் மேல் நிறுத்துவார். இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன் எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். ஆனால் எவ்வளவு நான் வருந்தி அழைத்தேனோ அவ்வளவாய் என்னை விட்டு தூரமாய் போனார்கள் பாகால்களுக்கு பலியிட்டார்கள். சிலைகளுக்கு தூபம் காட்டினார்கள். அவர்களை நடை பயிற்றுவித்ததும் நானே அவர்களை கையில் ஏந்தியதும் நானே, அவர்களை குணமாக்கியதும் நானே.ஆனால் அவர்கள் உணராமல் போனார்கள் என்று ஓசேயா 11:1,2,3 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். பிரியமானவர்களே நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று யோசித்து பார்ப்போம். இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் மனந்திருந்தி ஒரு சிறு பிள்ளையைப்போல் மாறி நம் ஆண்டவரின் பாதங்களை பற்றிக்கொண்டு அவர் விரும்பும் செயல்களை செய்து விண்ணரசில் பங்கு கொள்வோம்.
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே நாங்கள் நீர் விரும்பும் வண்ணம் ஒரு சிறு குழந்தையைபோல் மாறி உமக்கேற்ற பிரகாரம் செயல்படகற்றுத்தாரும்.தகப்பனே எங்கள் பாவங்களை ஒவ்வொருநாளும்
மன்னித்து நாங்கள் நடக்க வேண்டிய பாதையில் எங்களை வழி நடத்தும்.எங்கள் சீர்கேட்டை குணமாக்கி எங்களை மனப்பூர்வமாய் நேசித்து எங்கள்மேல் உள்ள கோபத்தை விலக்கி மீட்டுக்கொள்ளும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். எங்கள் தந்தையே. ஆமென்!அல்லேலூயா!!!