மனநிறைவு
16 ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்தவர்கள் தெற்கு அமெரிக்காவை கைப்பற்றுவதற்கு முயன்றார்கள். அப்போது, அவர்களின் தலைவன் பிரான்சிஸ்கோ பிசாரோ அவர்களிடத்தில் பேசினான்: நண்பர்களே! முக்கியமான முடிவு எடுக்கக்கூடிய கட்டத்தில் இருக்கிறோம். நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வழியாகச் சென்றால், பெரு நாடும், அதன் வளமும் நமக்குச் சொந்தமாகும். ஆனால், அங்கே ஆபத்து அதிகம். அதேவேளையில் பனாமா சென்றால், நமக்கு கிடைப்பது ஒன்றும் கிடையாது. ஆனால், பாதுகாப்பானது. எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டானாம். சற்று அமைதி அங்கே நிலவியது. தீடிரென்று ஒரு கும்பல் ஆபத்தான பாதைக்கு தயார் என்று சொல்ல, ஒட்டுமொத்த வீரர்களும் அதனை ஆமோதித்தனர்.
இயேசு விடுக்கக்கூடிய அழைப்பும் இத்தகையது தான். நாம் வாழ்வதற்கு இரண்டு வாய்ப்புகள். எப்படியும் வாழலாம்? என்பது ஒருபுறம். இப்படித்தான் வாழ வேண்டும்? என்பது மறுபுறம். இதில் நாம் தேர்வு செய்வதற்கு சுதந்திரத்தை கடவுள் நமக்குத் தந்திருக்கிறார். அவர் நம்மை கட்டாயப்படுத்துவது கிடையாது. இயேசு விடுக்கக்கூடிய அழைப்பில் குறிப்பிட்ட இலக்கில் தான் நாம் வாழ முடியும். அங்கே விழுமியங்கள் முதன்மையான இடம் பெறுகிறது. அங்கே ஆபத்துக்கள் அதிகம். ஆனால், வாழ்வின் மகிழ்ச்சியை அங்கு தான் நாம் காண முடியும். எப்படியும் வாழலாம்? என்பதில் நமக்கு இன்பங்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், அது நிறைவில்லாத வாழ்க்கை.
இயேசுவின் இந்த இரண்டு வாய்ப்புக்களில் நாம் எதை தேர்ந்தெடுக்கப் போகிறோம்? எப்படியும் வாழப்போகிறோமா? இப்படித்தான் என்று, இயேசு நமக்கு காட்டுகிற வழியில் நாம் வாழப்போகிறோமா? சிந்திப்போம். இயேசு நமக்குக் காட்டும் பாதையில், மகிழ்ச்சியோடு, மனிநிறைவோடு வாழப்பழகுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்