மனத்துணிவோடு வாழ்வோம்
‘இயேசு மீது எறிய யூதர்கள் கற்களை எடுத்தனர்’ என்று வாசிக்கக்கேட்டோம். எதற்காக இயேசுவை கல்லெறிய யூதர்கள் முடிவு செய்தனர்? அதற்கான பதில்: யோவான் 10: 33 “மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்”. பழைய ஏற்பாடு நூலில் லேவியர் 25: 16 ல் வாசிக்கிறோம், “ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார். சபையார் கல்லாலெறிவர்”. இயேசு தன்னை மெசியா, கடவுளின் மகன் என்று சொன்னதால், அவர் கடவுளைப்பழித்துரைக்கிறார் என்பது யூதர்களின் வாதம். எனவே, அவரை கல்லால் எறிய தயாராக இருந்தனர். ஆனால், இயேசு அவர்களின் பகைமையை தனது வாதத்திறமையால் துணிவோடு எதிர்கொள்கிறார்.
இயேசு தான் கடவுளின் மகன் என்பதை அழகாக நிரூபிக்கிறார். திருப்பாடல் 82: 6 சொல்கிறது: “நீங்கள் தெய்வங்கள்;: நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்”. இந்தப்பகுதியில் நீதித்தலைவர்களை திருப்பாடல் ஆசிரியர் தெய்வங்களாக சித்தரிக்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு நேர்மையோடு நீதி வழங்கச்செய்யும்போது, அவர்கள் தெய்வங்களாக, கடவுளின் புதல்வர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு நீதித்தலைவர் கடவுளால் தெய்வமாக மக்கள் நடுவில் அனுப்பப்படுகிறார். விடுதலைப்பயணம் 21: 6 ல் மற்றும் 22: 9, 28 ல், நீதித்தலைவர்கள் கடவுள் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். “அவனை அவன் தலைவன் கடவுளிடம் கூட்டிக்கொண்டு வருவான்”. “கடவுளை நீ பழிக்காதே”. மறைநூலே சாதாரண மனிதர்களான நீதித்தலைவர்களை அவர்களின் பணி அடிப்படையில் கடவுள் என்ற அளவுக்கு போற்றும்போது, பல வல்ல செயல்களை செய்யும் நான் ஏன் இப்படி பேசக்கூடாது? என்பது இயேசுவின் முதல் வாதம். இயேசுவின் இரண்டாம் வாதம்: என் வார்த்தைகளின் பொருட்டு அல்ல, என் செயல்களின் பொருட்டு நம்புங்கள். யூதச்சமுதாயத்தில் எத்தனையோ பேர் தங்களை மெசியா, கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டு, மக்கள் மத்தியில் வலம் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால், வல்ல செயல்களைச்செய்யமுடியவில்லை. இதன்மூலம் அவர்கள் போலியானவர்கள் என்பது தெளிவு. ஆனால், இயேசு வெறும் வார்த்தைகளினால் மட்டுமல்ல, தன்னுடைய செயல்களினால் மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். இதுவரை யாரும் செய்யாத வல்ல செயல்களை இயேசு செய்திருக்கிறார். முடவர்களை நடக்க வைத்திருக்கிறார், ஊமையர்களை பேச வைத்திருக்கிறார், கடலை அடக்கியிருக்கிறார். தீய ஆவிகளை ஓட்டியிருக்கிறார். இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார். தன்னுடைய வல்லமை கடவுளிடமிருந்து இல்லையென்றால், தன்னால் எப்படி இந்த அளவுக்கு வல்ல செயல்கள் செய்ய முடியும் என்பது இயேசுவின் இரண்டாம் வாதம். ஆக, பதில் சொல்ல முடியாமல், யூதர்கள் திகைத்து மீண்டும் அவரைப்பிடிக்க முயல்கின்றனர்.
இயேசுவின் மனத்துணிவு நம்மை வியக்கவைக்கிறது. எந்தச்சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட கேள்விகளுக்கும், எந்த அறிவார்ந்த மனிதர் முன்னிலையிலும் பயப்படாது, பின்வாங்காது, பொறுமையோடு, ஆதாரங்களோடு பதில் கொடுப்பது இயேசுவுக்கே உள்ள தனி அடையாளம். அதற்கு காரணம் அவரின் கடவுள் அனுபவம். இறைத்தந்தையோடு இருந்த ஒன்றிப்புதான், அவருக்கு இந்த ஆற்றலையும், பலத்தையும் தந்தது. வாழ்வை நிமிர்ந்து எதிர்கொள்ள ஆற்றல் தந்தது. அத்தகைய இறைவல்லமையை, கடவுள் ஒன்றிப்பை நாமும் பெற, இறையருள் வேண்டுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்