மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்துக்கொள்வோம்.
இறைஇயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு தவக்கால வாழ்த்துக்களை சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு அழைத்து வந்த நம் இயேசுவின் குணங்களை நாமும் பெற்று அவரின் திருவுளச் சித்தத்தை நிறைவேற்ற அவர் பாதம் பணிந்திடுவோம். அவர் சிலுவை சுமப்பதற்கு முன் நமக்கு கற்றுக்கொடுத்த அறிவுரைகளை நாமும் அப்படியே கடைப்பிடிப்போம். கடவுளின் மைந்தனாய் வந்த அவரே, அவரின் தந்தைக்கு எவ்வளவாய் கீழ்படிந்து நடந்தார் என்றால் நாம் இன்னும் எவ்வளவு கீழ்படிய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம் என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது” என்றார். மத்தேயு 11 :29 , 30.
இந்த நாளிலும் நாம் ஆண்டவரைப்போல் நம்மை மாற்றி ஒரே மனத்தவராய் இருக்கவும், உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகவும், நம்மையே அறிவாளி என்று கருதாமல் பிறரையும் மதித்து வாழ்ந்து இந்த தவக்காலத்தின் முக்கியத்தை அறிந்து கொள்வோம். ரோமர் 12:16. உண்மையான எண்ணத்துடன் முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்பினால் தாங்கி, வீண்பெருமையினால் இதைச் செய்யாமல் உண்மையாகவே மற்றவர்களை உயர்ந்தவராக எண்ணுவோம். எபேசியர் 4:2, பிலிப்பியர் 2:3.
ஏனெனில் நாம் கடவுளால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள். அவரது அன்பிற்குரிய இறைமக்கள். ஆகையால் அதற்கேற்ப பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளை நம்முடைய ஆடையாக அணிந்துக்கொள்வோம். கொலோசையர் 3:12. இதுவே நம் இயேசு விரும்பும் காரியமாகும்.
இவ்வாறு அவர் விரும்பும்படி நாம் செய்தால் அவர் நமக்கு அதிகதிகமான நன்மைகளை செய்வார். பெருமை உள்ளவர்களுக்கு கடவுள் எதிர்த்து நிற்கிறார். தாழ்மை உள்ளவர்களுக்கோ கடவுள் தமது
கருணையை, கிருபையை அளிக்கிறார். யாக்கோபு 4:6, 1 பேதுரு 5:5. அப்பேற்பட்ட கிருபையை நாமும் பெற்று சந்தோஷமாக, சமாதானமாக வாழ்ந்து பிறரும் வாழ முன்மாதிரியாய் திகழுவோம்.
ஜெபம்
அன்புள்ள இயேசப்பா,உம்மிடம் நாங்கள் கற்றுக்கொண்ட வாக்குகளின்படி வாழ்ந்து உமக்கு மகிமை சேர்க்க உதவி செய்யும். தினந்தோறும் அதிகாலையில் உம்மை தேடவும், உமது வார்த்தைகளை வாசித்து தியானிக்கவும், எங்களுக்கு போதித்தருளும். இந்த தவக்காலத்தில் நீர் விரும்பும்படி வாழ எங்கள் ஒவ்வொருவருக்கும் கற்றுத்தாரும். உமது பாடுகளை எண்ணி, நீர் எங்களுக்காக பட்ட கஷ்டங்களை தியானித்து உமக்கு பயந்து வாழ்ந்து உமக்கே மகிமை சேர்க்க போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நல் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் பிதாவே!ஆமென்.