மத்தேயுவின் மகிழ்ச்சி
வரிவசூலிக்கிறவர் மக்களால் வெறுக்கப்பட்ட காலத்தில், இயேசு அப்படிப்பட்ட ஒருவரை, தனது சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால், அதுதான் இயேசு. திருடர்கள் மற்றும் கொள்ளையர்களோடு, வரிவசூலிக்கிறவர்களை மக்கள் நினைத்தனர். அவர்கள் தொழுகைக்கூடத்தில் நுழைவதற்கு மக்களால் தடுக்கப்பட்டார்கள். சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து, அவர் வெறுத்து ஒதுக்கப்பட்டார். நேர்மையான வரிவசூலிக்கக்கூடியவரைப் பார்ப்பதது அபூர்வமாக இருந்தது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே சிலை வைக்கப்பட்டிருந்தது என்று வரலாறு சொல்கிறது. அப்படியென்றால், எந்த அளவுக்கு மக்கள் வரிவசூலிக்கிறவர்களால் சுரண்டப்பட்டனர் என்பதை, நாம் அறிந்து கொள்ளலாம்.
இங்கே மத்தேயுவின் செய்கை, நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறார். அது அவருக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தனக்கு மட்டும் போதும், என்று அவர் நினைத்திருக்கவில்லை. மாறாக, தான் பெற்ற மகிழ்ச்சி, தனது நிலையில் இருக்கிற, திருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிற, தன்னைப்போன்ற தன்னுடைய நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். எனவே, இயேசுவை அழைத்து ஒரு விருந்து படைக்கிறார். அந்த விருந்திற்கு, தன்னுடைய நண்பர்களையும் அழைக்கிறார். தான் மட்டுமே இன்புற வேண்டும் என்று நினைக்கிற இந்த காலக்கட்டத்தில், தனக்கு திருந்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு, தன்னுடைய நண்பர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும், தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வந்தது போல, அவர்களும் வர வேண்டும், என்று நினைக்கிற மத்தேயு, உண்மையில் மனமாற்றம் பெற்றவர் தான்.
மகிழ்ச்சி என்பது பகிரப்பட வேண்டும். அந்த மகிழ்ச்சி நாம் மட்டும் அனுபவித்தால் அது நிறைவோ, அமைதியோ தராது. மாறாக, அந்த மகிழ்ச்சி பகிரப்படுகிறபோது, அது நிறைந்த இன்பமாக மாறுகிறது. மகிழ்ச்சியை இன்பமாக மாற்ற, நமது வாழ்வை வாழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்