”மக்தலா மரியாவும் …யோவான்னாவும் சூசன்னாவும் இயேசுவோடு இருந்தார்கள்” (லூக் 8:2-3)
இயேசு தேர்ந்துகொண்ட சீடர்கள் எல்லாருமே ஆண்களா அல்லது அவர் பெண்களையும் தேர்ந்துகொண்டாரா? பன்னிரு திருத்தூதர்கள் ஆண்கள்தான் என்பது நற்செய்தியிலிருந்து தெரியவருகிறது. ஆனால் சீடர் குழு என்பது பன்னிருவர் குழுவை விடவும் பரந்தது. இயேசு ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார் என்பது நற்செய்தியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இப்பெண்களில் ஒருசிலர் பெயர்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. மக்தலா மரியா, யோவான்னா, சூசன்னா (லூக் 8:2-3) என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்ற மூவரும் யார் என்பது பற்றி ஒருசில தகவல்கள் உள்ளன. இவர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்து அவரிடமிருந்து இறையாட்சி பற்றிய நற்செய்தியைக் கேட்டு அறிந்தார்கள். பன்னிரு திருத்தூதர்களுக்கும் அடுத்த நிலையில் இப்பெண்கள் குறிக்கப்படுகிறார்கள் (லூக் 8:1-2). இயேசு தம் பணியைத் தொடங்கிய நாள்களிலிருந்தே இப்பெண்கள் அவரோடு இருந்தார்கள். ”ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மரியா” மக்தலா என்னும் இடத்தைச் சார்ந்தவர். இயேசுவின் காலடிகளை நறுமணத் தைலத்தால் பூசிய ”பாவியான பெண்” இவரல்ல என்பது இன்றைய அறிஞர் கருத்து (லூக் 7:36-50). சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவை முதலில் கண்டவரும் அந்த மகிழ்ச்சியான செய்தியை ஓடிச்சென்று திருத்தூதர்களுக்கு அறிவித்தவரும் இந்த மக்தலா மரியா (காண்க: லூக் 24). அடுத்தபடியாகக் குறிக்கப்படுகின்ற யோவான்னா என்பவரும் இயேசுவின் சீடராக இருந்தவரே. சமுதாயத்தில் மேல்மட்டத்தவராயிருந்த இவர் ”ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி” (லூக் 8:3). மூன்றாவது குறிக்கப்படுகின்ற சூசன்னா என்னும் பெண் பற்றி வேறு தகவல்கள் இல்லை.
மக்தலா மரியா, யோவான்னா, சூசன்னா என்னும் மூன்று பெண்கள் மட்டுமன்றி வேறு ”பல பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள்” (லூக் 8:3) என லூக்கா கூறுவதிலிருந்து இப்பெண்கள் ஊர் ஊராகச் சென்று போதித்த இயேசுவோடு சென்றார்கள் என அறிகிறோம். அவர்களிடையே சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களும் வசதிபடைத்தவர்களும் இருந்தார்கள். பெண்களையும் தம் சீடராக அழைத்த இயேசு ஆண்-பெண் சமத்துவத்தைப் போற்றுவதை இவண் காண்கின்றோம். பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்னும் கருத்து நிலவிய அச்சமுதாயத்தில் இயேசு பெண்களைச் சீடர்களாகக் கொண்டது புரட்சிகரமானதுதான். மேலும் இப்பெண்கள் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டதோடு, அவருடைய வல்லமையால் நோயிலிருந்து குணமடைந்து நலமும் பெற்றிருந்தனர். இவ்வாறு இயேசுவின் பணி அவர்களுக்குப் பலன் தருவதாயிற்று. அவர்கள் பெற்ற கொடைக்கு நன்றி கூறுவதுபோல அவர்கள் இயேசுவின் பணி நல்முறையில் நடந்திட துணைசெய்தார்கள் (லூக் 8:3). சிலுவையில் தொங்கி இறந்த இயேசுக் கைவிட்டு ஓடவில்லை இப்பெண்கள். மாறாக, அவரோடு இறுதி வரை இருந்தார்கள். மேலும் கல்லறைக்கு முதன்முதலாகச் சென்றவர்களும் அவர்களே. இயேசுவை நாம் முழு உள்ளத்தோடு பின்செல்ல வேண்டும் என்பதற்கு மக்தலா மரியாவும் யோவான்னாவும் சூசன்னாவும் சிறந்த எடுத்துக்காட்டு.
மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் மன உறுதியோடு பின்சென்றிட அருள்தாரும்.
–அருட்திரு பவுல் லியோன் வறுவேல்