மக்களுக்காக வாழ்ந்த இயேசு
கழுகுப்பார்வைகள், இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கூர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டன. எப்படியும் இயேசுவை தொலைத்துவிட வேண்டும் என்று, தலைமைச்சங்கத்தால் அனுப்பப்பட்ட குழு, இயேசுவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் ஒவ்வொரு அசைவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இயேசுவின் முன்னால், ஓய்வுநாளில் கைசூம்பிப்போன மனிதன், குணம் பெறுவதற்காக காத்திருக்கிறான். அந்த மனிதனுக்கும் தெரியும், ஓய்வுநாளில் சுகம்பெறுவது, தனக்கு சுகம் கொடுக்கிறவருக்கு தேவையில்லாத பிரச்சனைகளைத் தரும் என்று. ஆனால், அந்த மனிதன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குணம் பெறுவது ஒன்றையே இலக்காக வைத்திருக்கிறான்.
ஓய்வுநாளில் குணப்படுத்துவது வேலைசெய்வதாகும். உயிர்போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கிற ஒருவனுக்கு மட்டுமே, ஓய்வுநாளில் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தால், அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். ஏன் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இந்த சட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு கேட்கத்தோன்றும். நமது பார்வையில், இதனைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், யூதர்கள் எந்த அளவுக்கு, இதனை கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம் என்றால், நம்மால் அதனுடைய யதார்த்த நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஓய்வுநாளில், யூதர்கள் தங்கள் உயிரைக்கூட காத்துக்கொள்ள மாட்டார்கள். தன்னை ஒருவன் கொல்ல வருகிறான் என்றால், அதற்கு தங்களைக் கையளித்துவிடுவார்கள். அவ்வளவுக்கு கடினமாக கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில்தான், இயேசுவின் புதுமை நிகழ்ச்சி நடக்கிறது.
இயேசுவுக்கு சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் மீற வேண்டும் என்பது ஆசையல்ல. அவர் வேண்டுமென்றே மீறியதும் இல்லை. ஆனால், நன்மை செய்வதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதுதான், அவருடைய வாதம். சட்டங்கள் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே இருக்கிறது. அந்த சட்டங்களே நன்மை செய்வதற்கு தடையாக இருந்தால், அதனையும் தாண்டிச்செல்ல வேண்டும் என்பது இயேசுவின் வாதம். அதனை நமது வாழ்விலும் சரியான புரிதலோடு பயன்படுத்துவோம். செயல்படுத்துவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்