மக்களுக்காக வாழ்ந்திட…
இன்றைய நற்செய்தியில் புதுமைகளோ, அருங்குறிகளோ, போதனையோ காணப்படவில்லை என்றாலும், இந்த பகுதி ஒரு மிகமுக்கியமான பகுதியாக காணப்படுகிறது. ஏனென்றால், வரலாற்றை மாற்றக்கூடிய நிகழ்வுகள் இந்த பகுதியில்தான் நாம் பார்க்கிறோம். முதலில் திருமுழுக்கு யோவானைப்பற்றிய செய்தி. திருமுழுக்கு யோவானுக்கு அவருடைய முடிவு எப்படி இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். அப்படி அவர் எண்ணியதும் சுயநலத்திற்காக கிடையாது, பொதுநலத்திற்காகவே. தன்னுடைய பணி மெசியாவிற்காக மக்களை ஆயத்தப்படுத்துகின்ற பணி. ஆனால், இன்னும் மெசியா தன்னுடைய பணியை ஆரம்பித்ததாக தெரியவில்லை. அதற்குள்ளாக தான் கைது செய்யப்பட்டுவிட்டோம். ஒருவேளை நாம் அவரசரப்பட்டு விட்டோமோ என்று, நிச்சயம் திருமுழுக்கு யோவான் நினைத்திருக்கக்கூடும். ஆனால், அவருடைய சிறைவாசம் தான், மெசியா வருகைக்கான தொடக்கம் என்பது அவர் அறியாத ஒன்று.
திருமுழுக்கு யோவானுக்கு அடுத்தபடியாக இயேசுவைப்பற்றிய செய்தியும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும். இயேசு தனது சொந்த ஊரான நாசரேத்தை விட்டு அகன்று, கப்பர்நாகுமுக்குச் செல்கிறார். இதுவரை தனது தாயோடு இருந்தவர், தனக்காக வாழ்ந்தவர், தன்னைத்தயாரித்தவர், இப்போது எதை நோக்கி அவரது பயணம் இருந்ததோ, அதனை தொடங்குகிறார். நிச்சயம் ஒருவரின் சொந்த ஊரைவிட்டு வேறிடத்திற்குச் செல்வது கடினமான ஒன்று. சொந்த ஊரின் மீது நமக்குள்ள உறவு, பிணைப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதது. ஆனாலும், அதைவிட கடவுள் தனக்காக வகுத்திருந்த திட்டத்தைச் செயல்படுத்துவது முக்கியமானது என்பதை, இயேசு உணர்ந்திருந்தார். திருமுழுக்கு யோவானும் தனது நலனைவிட பொதுநலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இயேசுவிடமும், திருமுழுக்கு யோவானிடமும் இருந்த அந்த மனநிலை நம்மிடத்தில் இருக்கிறதா? என்று சிந்திப்போம். இரண்டு பேருமே மக்கள் நலனை முன்னிறுத்தினார்கள். தங்களது விருப்பு, வெறுப்புக்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அதேபோல, நாமும் சுயநலம் இல்லாமல் வாழ பழகிக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்