போதிப்பவரின் கடமை
யோவான் நற்செய்தியாளர் இயேசுவைப்பற்றி செய்தி அறிவிப்பதற்குத்தான் தனது நற்செய்தியை எழுதுவதன் நோக்கமாக தொடக்கத்திலேயே சொல்கிறார். அப்படி இருக்கிறபோது, எதற்காக திருமுழுக்கு யோவானின் நற்செய்திப்பணி பற்றி அவர் கூற வேண்டும்? எதற்காக இயேசுவின் பணிவாழ்வோடு திருமுழுக்கு யோவானின் பணிவாழ்வையும் கலந்து சொல்ல வேண்டும்? இதற்கு பதில் இல்லாமல் இல்லை.
திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடி மட்டும்தான். அவர் வரவிருந்த மெசியா அல்ல. இது திருமுழுக்கு யோவானுக்கும் தெரிந்திருந்தது. அவருக்குரிய இடம் நிச்சயமாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இயேசுவுக்கான இடம் அதற்கும் மேலான இடம். ஆனால், இயேசுவுக்கான இடத்தை திருமுழுக்கு யோவானுக்குக் கொடுத்து, அவரை மெசியா எனவும், மீட்பர் எனவும் மக்கள் அழைக்கக்கூடிய அளவுக்கு, அவர் பெயர் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான், இயேசு, நிச்சயமாக திருமுழுக்கு யோவானைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக, நற்செய்தியாளர் இந்த பகுதியில், இரண்டு கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறார். இந்த பகுதி திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியின் மகிமையையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது. ஏனென்றால், திருமுழுக்கு யோவானின் போதனையைக் கேட்க கூடியிருந்த பல மக்கள், இயேசுவின் போதனையைக் கேட்ட கூட்டம், கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தனர். அதைப்பார்த்து, திருமுழுக்கு யோவான் மகிழ்ச்சி அடைந்தார். ஏனென்றால், தனது போதனையின் அடிப்படைச் செய்தி மக்களை சென்றடைந்திருக்கிறது என்பது நிச்சயம் அவருக்கு பேரானந்தம்.
இன்றைக்கு யாருடைய போதனைக்கு அதிக மக்கள்கூட்டம் வருகிறது என்பது பற்றி போட்டியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனது போதனைதான் நன்றாக இருக்க வேண்டும்? மக்கள் என்னைத்தான் பாராட்ட வேண்டும் என்று, மனிதர்களை முன்னிறுத்தி போதனைகள் அமைந்திருக்கின்றன. போதனையை முன்னிறுத்தி, யாரும் போதிக்கவில்லை. அப்படி போதித்தாலும் அது அவர்களால் வாழ்ந்து காட்டப்படவில்லை. திருமுழுக்கு யோவானைப்போல், போதனையில் தாழ்ச்சியும், போதிப்பதில் எடுத்துக்காட்டும் உள்ளவர்களாக வாழப்பழகுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்