போதனையை வாழ்வாக்குவோம்
இயேசுவின் கடுமையான வார்த்தைகளை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஏழு முறை “ஐயோ, கேடு” என்ற கண்டன வார்த்தைகளை இயேசு உதிர்க்கிறார். “ஐயோ, கேடு“ என்ற வார்த்தைக்கு பொருள் கட்டுக்கடங்காத கோபம் மட்டுமல்ல, தீராத வருத்தமும் சேர்ந்ததுதான். அது ஒரு நேர்மையான கோபம். அநியாயத்தைக்கண்டு பொறுக்க முடியாமல் வெளிப்படுத்துகின்ற உணர்வுகள்.
இயேசுவின் கோபத்திற்கு இரண்டு காரணங்கள் நாம் சொல்லலாம். 1. பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் வெளிப்புற அடையாளங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அடையாளங்கள் காட்டுகின்ற உண்மையான அர்த்தத்திற்கு கொடுக்கத்தவறி விடுவதுதான். 2. சொல்லப்படுகிற கருத்துக்களும், சிந்தனைகளும் மற்றவர்களுக்குத்தான், தங்களுக்கில்லை என்ற மமதையும் அவர்களோடு சேர்ந்துகொள்ள, இயேசுவினுடைய கடுமையான கோபத்திற்கு ஆளாகின்றனர்.
போதிக்கின்ற போதனைகளும் முதலில் நமதாக்கப்பட வேண்டும். வாழ்ந்து காட்டப்படாத போதனைகள் உயிர் இல்லாத சவம் போன்றதுதான். பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் போதனை இப்படித்தான் இருந்தது. நம்முடைய போதனை வாழ்ந்து காட்டி சொல்லப்படுவதாக இருக்கட்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்