பொல்லார் கையினின்று என்னை விடுவித்தருளும்
திருப்பாடல் 71: 1 – 2, 3 – 4, 5 – 6, 17
பொல்லார் யார்? தீங்கு செய்யக்கூடியவர்களே பொல்லார். தீங்கு செய்யக்கூடிய மனிதர்களிடமிருந்து விடுவித்தருள வேண்டும் என, திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். யாரெல்லாம் சுயநலத்தோடு சிந்திக்கிறார்களோ அவர்களே தீங்கு செய்யக்கூடியவர்கள். அவர்கள் வெறுமனே உடலுக்கு மட்டும் தீங்கு செய்யக்கூடியவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஆன்மாவிற்கும் ஊறு விளைவிக்கக்கூடியவர்கள். அவர்களின் சுயநலத்திலிருந்தும், தீங்கு செய்யக்கூடிய எண்ணத்திலுமிருந்து தன்னைக் காத்தருள கோரிக்கை வைக்கிறார்.
ஏன் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்? கடவுள் மட்டும் தான், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து தன்னை காக்க முடியும் என்று, ஆசிரியர் நம்புகிறார். மனிதன் பலவீனன். அவன் நல்லவனாக வாழ வேண்டும் என்று விரும்பினாலும், நினைத்தாலும் இந்த உலகம் அவனை சும்மா விட்டுவிடாது. ஒருவன் நல்லவனாக வாழ விரும்பினால், அவன் சந்திக்கக்கூடிய சவால்கள் இந்த உலகத்தில் நம்ப முடியாதவையாக இருக்கும். அந்த அளவுக்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சவால்களையும் தனியொரு மனிதனாகச் சந்திப்பது இயலாத காரியம். கடவுளின் ஆற்றலும், வல்லமையும் ஒருவருக்கு தேவைப்படுகிறது. அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கேட்கிறார். பிறப்பிலிருந்து இன்றைய நாள் வரை கடவுள் தான், ஒரு மனிதரை எந்த தீங்கும் நேராமல் காத்து வந்திருக்கிறார். ஒவ்வொரு நிமிடமும் உயிர் வாழ்வதே, கடவுளின் இரக்கத்தால் மட்டும் தான். அவரின் இரக்கம் இல்லையென்றால், நாமும் மண்ணோடு மண்ணாக வேண்டியதுதான். எனவே, கடவுள் தான், தனக்கு எல்லாமே என்கிற ஆழமான செய்தியை இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் நமக்கு கற்றுத்தருகிறார்.
இந்த உலகத்தில் ஒவ்வொருநாளும் நடக்கும் விபத்துக்களையும், அனுபவிக்கும் நோய்களையும் பார்க்கிறபோது, நாம் உயிர் வாழ்வதே ஏதோ புதுமை போல இருக்கிறது. அந்த அளவுக்கு, வாழ்க்கை பயங்கரமானதாக, ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. கடவுள் மீது நம்பிக்கை வைத்து வாழ்கிறபோதுதான், நம்மால் நிம்மதியாக வாழ முடியும். அந்த நம்பிக்கையை நமது வாழ்வாக்க, இந்த திருப்பாடல் வழியாக ஆண்டவரிடம் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்