பொல்லாரின் வழியோ அழிவைத்தரும்
கடவுளின் முன்னிலையில் நிற்கக்கூடிய தகுதி யாருக்கு கிடைக்கும்? கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக இருக்கிறவர் யார்? என்கிற கேள்விகளை எழுப்பி, கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்கிற சிந்தனையை விதைக்கிறது இன்றைய திருப்பாடல் (திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6). இறைவனுடைய நிறைவான ஆசீர்வாதத்தைப் பெற்று, அவருடைய பிள்ளையாக வாழ வேண்டும் என்பதே, நம்முடைய வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் அறிவுரையாக இருக்கிறது.
இன்றைய சமுதாயத்தில் தவறான வழிகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், கவர்ந்திழுக்கிறதன்மை உடையதாகவும் இருக்கின்றன. நல்ல சிந்தனைகள், விழுமியங்கள் அவர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. தவறான வழியில் செல்கிறவர்கள் அழிவைத்தான் சந்திக்க வேண்டி வரும் என்கிற எச்சரிக்கை உணர்வை இந்த திருப்பாடல் அழுத்தமாக பதிவு செய்கிறது. நல்ல விதைகளும், பதரும் இருக்கிற இடத்தில் காற்று வீசுகிறபோது, பதர்கள் வெகு எளிதாக காற்றினால் அடித்துச் செல்லப்படும். நல்ல விதைகளைப் போல, பதரினால் நிலைத்து நிற்க முடியாது. அதேபோல பொல்லார் அதாவது தவறான வழியில் செல்கின்றவர்கள், அழிவைத்தான் தேடுவர் என்று ஆசிரியர் சாடுகிறார். தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறவர்களை நல்வழிக்கு அழைக்கிறார்.
ஆண்டவருக்குரியதை நாம் அனைவரும் நாட வேண்டும். ஆண்டவருக்குரியதை நாடுகிறபோது, அவரது வழியில் நடக்கிறபோது, நம்முடைய வாழ்க்கை எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்றதாக அமைகிறது. அது வாழ்வதற்கு கடினமானதாக இருந்தாலும், மகிழ்வையும் நிறைவையும் தரக்கூடியதாக இருக்கிறது. இறைவன் முன்னிலையில் மாசற்றவர்களாக வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்