பொறுமை – வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்
எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை, மறைநூல் அறிஞர்களின் அறிவுக்கண்களை மறைத்துவிடுகிறது. அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள். இயேசு இதை அறியாதவரல்ல. அதற்காக, நிதானம் இழந்து அவர்கள் மீது கோபப்படுகிறவரும் அல்ல. நிதானம் இழக்காமல் பொறுமையோடு, அதேநேரம் துணிவோடு அவர்களின் கூற்றைப்பொய்யாக்குகிறார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், அவர் மீது சமத்தப்பட்ட ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இயேசுவின் பதில் மக்களுக்கு அவர்மீதுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிற பெயல்செபூலைக்கொண்டு எப்படி அவனுக்கு உதவிசெய்கிற தீய ஆவிகளை அழிக்க முடியும்? என்பதுதான் இயேசுவின் கேள்வி.
வாழ்க்கையில் எவ்வளவோ வலிகள், வேதனைகள் நாம் தவறுசெய்யாமல் இருக்கிறபோதும் வருகின்றபோது, அவற்றைப்பார்த்து பொறுமை இழக்கக்கூடாது. நிதானம் இழக்கக்கூடாது. பொறுமையோடு, துணிவோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அப்படி எதிர்கொள்கின்றபோது கடவுள் தன்னுடைய வல்லமையால், அவற்றை எதிர்கொள்ளத்துணிவைத்தருவார். வெற்றியை நாம் சுவைக்கச்செய்வார்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்