பொறுமை
யூதர்களின் திருமணம் மூன்று நிலைகளைக்கொண்டது. முதலில் திருமணம் பேசிவைத்தல். அதாவது குழந்தைகளாக இருக்கிறபோதே, பெற்றோர்களாலோ அல்லது திருமணத்தரகர்கள் மூலமாகவோ இந்த பையனுக்கு, இந்தப்பெண்ணை பிற்காலத்தில் மணமுடிப்போம் என்று பேசி வைத்திருப்பார்கள். சிறுவயதில் ஒருவரையொருவர் பார்க்காமலே இதைப்பெரும்பாலும் முடித்துவைப்பர். ஒருவேளை அந்த சிறுவனோ, சிறுமியோ பெரியவர்களானபிறகு ஒருவருக்கு மற்றவருக்கு பிடிக்கவில்லை என்றால், இந்த உறவை முறித்துக்கொள்ளலாம். இரண்டாவது திருமண ஒப்பந்தம். இந்த திருமண ஒப்பந்த காலம் என்பது ஓர் ஆண்டாகும். இந்த திருமணஒப்பந்தத்தில் கணவன், மனைவிக்குரிய உரிமைகள் அவர்களுக்கு இல்லையென்றாலும், அவர்கள் கணவன், மனைவியாகவே கருதப்படுகிறார்கள். இந்த உறவை முறிப்பதற்கு கண்டிப்பாக விவாகரத்து பெற வேண்டும். இந்தகாலக்கட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற கணவன் இறந்துபோனால், ‘கணவனை இழந்த கன்னி’ என்று அந்தப்பெண் அழைக்கப்படுவாள். மூன்றாவது திருமணம். அதாவது, திருமணஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற ஆண்டின் இறுதியில் முறைப்படி திருமணம் நடைபெறும்.
பொறுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு யோசேப்பு. வாழ்வை பொறுமையோடு அணுகுவதுதான் யோசேப்பின் வெற்றி. மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி கேள்விப்பட்டதும், அவர் தன்னுடைய உணர்வுகளுக்கு இடமளித்து, மரியாவின் மீது கோபப்படவில்லை. மரியாவைப்பற்றி, அவளுடைய பண்புகளைப்பற்றி யோசேப்பு நிச்சயம் நன்றாக அறிந்திருப்பார். மரியாள் தவறிழைக்கக்கூடிய பெண் அல்ல என்பதும் யோசேப்புக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏதோ நடந்திருக்கிறது? அது என்னவென்று தெரியவில்லை. தெரியாதவரை பொறுமையாக இருப்பது நல்லது என யோசேப்பு நினைக்கிறார். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். மின்சாரம் தடைபடுகிறது. எங்கும் ஒரே இருட்டு. ஒன்றுமே தெரியவில்லை. அதிலிருந்து மீள ஒரே வழி, பொறுமையாக இருப்பதுதான். ஒருநிமிடம் பொறுமையாக இருந்தால், அந்த இருளுக்கு நமது கண்கள் பழக்கப்பட்டுவிடும். காரிருளில் நம்மால் நடக்கமுடியும். பதற்றத்தில் மின்சாரம் சென்றவுடன், அங்கும் இங்கும் நடந்தால் கீழே விழவேண்டியதுதான். இந்தப்பொறுமையை யோசேப்பு நமக்கு கற்றுத்தருகிறார்.
இந்த உலகம் வேகமான உலகம். இதிலே நிதானத்திற்கு இடமில்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற நிலைதான். இன்றைக்கு பல திருமணங்கள் உடைவதற்கு காரணம் இந்த வேகம் தான். பொறுமை வாழ்விற்கு அவசியம். முடிவெடுக்கும் தருணங்களில், வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதில், தேர்வு எழுதுவதில், கடவுளிடம் செபித்து காத்திருப்பதில் பொறுமை அவசியம். அத்தகைய பொறுமையை யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
~அருட்பணி. தாமஸ் ரோஜர்