பொருள் உணர்ந்து வழிபடுவோம்
எந்தவொரு வழிபாட்டுச்சடங்கையும் அதன் பிண்ணனியோடு, பாரம்பரியத்தோடு, வரலாற்றோடு பொருத்திப்பார்த்தால் தான், அதன் பொருளையும், அதில் இருக்கக்கூடிய முழுமையான அர்த்தத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அல்லது, அதை தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்திப்பகுதியின் பிண்ணனி அறிந்து, நாம் வாசித்தால் அதன் ஆழத்தையும், கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வில், நற்கருணை என்றழைக்கப்படும் இயேசுவின் திருவுடல் தரும், தெய்வீக அருளை நாம் நிறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்றைக்கு, கத்தோலிக்க வழிபாட்டைப் பார்க்கும் எவரும், இயேசுவின் திரு உடலை உட்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை வித்தியாசமாகத்தான் பார்ப்பர். காரணம், ஒரு மனிதனுடைய உடலை உண்ணும் பழக்கம், நமது பண்பாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு மனிதன் தனது சதையை எப்படி மற்றவர்கள் உண்ணக் கொடுக்க முடியும்? ஒரு மனிதனுடைய இரத்தத்தை, மற்ற மனிதர்கள் எப்படி அருந்த முடியும்? அது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? இது போன்ற கேள்விகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் எழும். எவற்றையும் சடங்காகப் பார்த்தால், நிச்சயம் குறைசொல்லத் தோன்றும். சடங்கில் இருக்கும் பொருளை உணர்ந்தால், நமது வாழ்விற்கு அது தரும் அருள் நமக்கு, நிறைவாக விளங்கும்.
சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாமே வெறும் மூடநம்பிக்கைகளாக, இன்றைய தலைமுறையினரால் பார்க்கப்படுகிறது. அதனைக்கடந்து அவர்கள் சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். சடங்கு, சம்பிரதாயங்களில் உள்ள அர்த்தங்களை, இன்றைய தலைமுறையினர்க்குக் கற்றுக்கொடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்