பேராசையை சுட்டு பொசுக்குங்கள்…
லூக்கா 12:13-21
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
வாழ்வில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஆனால், அந்த ஆசைகள் பேராசையாக மாறும் போது தான் பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. அத்தகைய பேராசைகளை வேரறுக்க வேண்டும் என, நமக்கு உணர்த்தும் நாளே தித்திப்பான திங்கள்கிழமை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். பேராசை பொல்லாதது அந்த பொல்லாததை எப்படி சுட்டு பொசுக்க வேண்டும் என்பதை நாம் இரண்டு வழிகளில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
1. சிறிய வழி
பேராசை பெரும்பாலும் நிறைய பொருட்களை குவிக்க வேண்டும், நிறைய சொத்துக்களை குவிக்க வேண்டும். பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதில் உள்ளது. அப்படிப்பட்ட நம்முடைய எண்ணம் தவறானது என்பதை ஆண்டவர் இயேசு சுட்டிக் காட்டுகின்றார். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்கிறார். மிகுதியான உடைமைகள் உள்ளதிற்கு மகிழ்ச்சியை தரவே முடியாது. சிறிய வழியில் வாழ முயற்சி செய்யும்போது இவைகள் பெரிதாக நமக்கு தென்படுவதில்லை. புனித குழந்தை தெரசம்மாள் சிறிய வழியை எடுத்தார். ஆகவே அவரை பேராசை என்பது தொற்றவே இல்லை. நாமும் சிறிய வழியில் சிறப்பாக பயணிப்போம்.
2. சிந்தித்த வழி
நாம் நம் வாழ்க்கையில் மிகச் சிறப்பாக சிந்திக்க வேண்டும். தோ்ந்து தெளிந்து பார்க்கும் அறிவை ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ளார். அதை நாம் பயன்படுத்த வேண்டும். சிந்தித்து சிறந்த வழியை தேட வேண்டும். பேராசை கொண்டவர்கள் எல்லாம் நன்கு வாழ்ந்ததாக சரித்திரமில்லை. ஆகவே நான் அந்த பொல்லாங்கை சுட்டு பொசுக்குவேன் என ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டும்.
மனதில் கேட்க…
1. எனக்குள் இருக்கின்ற பேராசைகள் என்னென்ன? அனைத்தும் பொல்லாததுதானே?
2. சிறிய வழி, சிந்தித்த வழியில் நான் நடந்து பார்க்கலாம் அல்லவா?
மனதில் பதிக்க…
எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் (லூக் 12:15)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா