பேராசைக்கு இடங்கொடாதீர் !
பேராசையைப் பற்றிய இயேசுவின் போதனை இது: எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். பேராசைகள் பல வகைப்படுகின்றன. பணத்தின்மீது பேராசை, பொருள்களின்மீது பேராசை, பதவியின்மீது பேராசை, புகழ்மீது பேராசை … எனப் பல்வேறு விதமான பேராசைகள் இருக்கின்றன. அளவுக்கதிகமான ஆசைதானே பேராசை. ஓரளவு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதற்காகவே ஏக்கம் கொண்டு, எந்நேரமும் அதே எண்ணமாக இருப்பது பேராசை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. எனவே, நமது எண்ணங்களை, விருப்பங்களை நாம் அவ்வப்போது ஆய்வு செய்துகொள்வது அவசியம். பணத்தை, பொருள்களை சேமிப்பவர்கள், பதவிகளில் அமர்ந்தவர்கள், புகழ் பெற்றவர்கள் பெரும்பாலும் அதில் நிறைவடைவதை நாம் காண்பதில்லை. இன்னும் அதிகமாகப் பணமும், பொருள்களும் சேர்க்க விரும்புகிறார்கள், இன்னும் அதிகமாகப் புகழும், பதவிகளும் அடைய விரும்புகிறார்கள். இதுதான் மனித இயல்பு. இந்த இயல்பை உடைத்து, மனநிறைவு என்னும் இறை இயல்புக்குள் நுழைய முயற்சி செய்வோம். எனக்க வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ எதற்கும் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன் (பிலி 4:13) என்று அறிவித்த புனித பவுலடியாரைப் போல நாமும் பயிற்சி பெறுவோமாக.
மன்றாடுவோம்: மனநிறைவின் ஊற்றே இறைவா, எவ்வகைப் பேராசைக்கம் இடங்கொடாத மனதை எனக்குத் தந்தருளும். நீர் எனக்குத் தந்திருக்கிற கொடைகள், நன்மைகள், செல்வங்களை எண்ணிப்பார்த்து, நன்றி சொல்கிற, மகிழ்ச்சி அடைகிற மனநிலையை எனக்குத் தாரும். நீர் தரும் ஆறுதலும், உம்மோடு;, உமக்காக செலவழிக்கும் நேரமும் எவ்வளவோ மேலானவை என்பதை நான் உணரச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா