பேதுருவின் உயிர்ப்பு அனுபவம்
இயேசு தனது சீடர் ஒவ்வொருவரின் மீதும் எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது, இந்த உயிர்ப்பு நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இயேசு இறந்தபோது ஓய்வுநாள் நெருங்கிவிட்டதால் அவசர, அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்தனர். எனவே, வழக்கமாக செய்யும் சடங்குமுறைகளை முழுமையாக அவர்களால் செய்ய முடியவில்லை. செய்ய வேண்டிய சடங்குமுறைகளை செய்துமுடிப்பதற்காக வெகுவிரைவாகவே, ஓய்வுநாள் முடிந்தவுடன் கல்லறைக்குச் செல்கிறார்கள்.
ஏறக்குறைய எல்லார் மனதிலும் ஒருவிதமான கலக்கமும், திகிலும் நிறைந்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்ட மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இரண்டொரு நாட்களில் அவர்களின் வாழ்வே மாறிவிடும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை. அப்படியிருக்கிற சூழ்நிலையில் தான், இயேசு உயிர்த்துவிட்டார் என்கிற செய்தி, சீடர்களுக்குத் தரப்படுகிறது. இந்த செய்தி அனைவருக்கும் சொல்ல முடியாத மகிழச்சியைத் தந்திருந்தாலும், பேதுருவுக்கு அது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால் வெண்தொங்கலாடை அணிந்த இளைஞர் பெண்களிடம், ”பேதுருவிடமும், மற்றச்சீடரிடமும் உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்” என்ற செய்தியை அறிவிக்கச் சொல்கிறார். மனப்புழுக்கத்திலும், குற்ற உணர்ச்சியிலும், தான் செய்த தவறை இயேசு மன்னிப்பாரா? என்று குமுறிக்கொண்டிருந்த பேதுருவுக்கு, இது எதிர்பாராத ஆனந்தத்தைக் கொடுக்கிற செய்தி. அவர் அடைந்திருந்த மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது.
நமது வாழ்வில் இந்த உயிர்ப்பு நமக்கு மகிழ்ச்சியின் அனுபவமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் பாவம் செய்திருந்தாலும், பாவியாக இருந்தாலும் நமக்காகவும் இயேசு இறந்திருக்கிறார். நமது பாவங்களை விடுவிக்க, உயிர்த்திருக்கிறார். ஆக, கடவுள் நம்மையும் அன்பு செய்கிறார். ஒவ்வொருவரையும் அவர் அன்பு செய்கிறார். அந்த அன்பிலே நாம் இணைந்திருந்து, நாம் கடவுளைப் போற்றுவோம். அவரது அன்பை சுவைத்துணர்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்