பேதுருவின் இறையனுபவம்
திருத்தூதர் பணி 9: 31 – 42
திருத்தூதர் பேதுரு செய்கிற வல்ல செயல்களை, அற்புதங்களை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சுகமும், இறந்து போனவர்க்கு உயிரும் கொடுக்கிறார். இயேசுவோடு வாழ்ந்தபோது, பல அற்புதங்களை செய்ய முடியாமல் இருந்தவர், இப்போது தனியாகவே அற்புதங்களைச் செய்வது, நிச்சயம் அங்கிருந்தவர்க்கெல்லாம் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். எப்படி இவரால் இவற்றைச் செய்ய முடிகிறது? என்கிற கேள்வி மக்களின் உள்ளங்களை துளைத்தெடுத்திருக்க வேண்டும்.
ஒரு குழந்தை தன் தாய் இருக்கிறபோது, நடந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அந்த குழந்தை நடக்கிறபோது கீழே விழுந்துவிட்டால், அது மீண்டும் எழ முயற்சிக்காது. மாறாக, அழ ஆரம்பிக்கும். தாய் தன்னை தூக்க வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கும். அதே குழந்தை தாய் இல்லாத நேரத்தில், நடந்து வருகிறபோது கீழே விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்குமிங்கும் பார்க்கும். தொடர்ந்து எழுந்து நடக்க ஆரம்பிக்கும். இயேசுவோடு சீடர்கள் இருந்தபோது, கிட்டத்தட்ட குழந்தைகள் நடக்க பயில்கிற நிலையில் தான் இருந்தார்கள். ஆனால், உயிர்ப்பு அனுபவம், அவர்களை முற்றிலுமாக மாற்றுகிறது. நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. எனவே, அவர்கள் சங்கடங்கள் இல்லாமல், தங்கள் கடமையைச் செய்ய முடிகிறது.
இறைவன் மீது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதிகமாவதோடு நின்றுவிடக்கூடாது. அது ஆழப்பட வேண்டும். இன்னும் வலுப்பெற வேண்டும். அதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும். சீடர்கள் அதைத்தான் செய்தார்கள். இயேசுவின் இறப்பு நிகழ்ந்த பிறகு சந்தித்த நெருக்கடிகள், சவால்கள் அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தியது. இறை அனுபவத்தைக் கொடுத்தது. நாமும் அத்தகைய அனுபவத்தைப் பெற மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்