பேசக் கற்றுக்கொள்பவரே பெரியவர்
லூக்கா 9:46-50
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மனிதர்களாகிய நாம் வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம். பலவற்றை ஆர்வமாக தெரிந்துக்கொள்ளும் நாம் எப்படி பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள தவறிவிடுகிறோம். குழந்தைகள் இனிய குரல் எல்லோரையும் ஈர்க்கிறது. அந்த இனிய குரலில் பேசுபவர் தான் பெரியவர். என்வே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறு குழந்தையை உதாரணமாகத் தருகின்றார். அவர்களைப் போல இனிமையாக பேசி நம்மோடிப்பவர்களை இழுக்க, ஈர்க்க அழைக்கின்றார்.
நாம் சரியாக பேசவில்லை என்றால் அதனால் பல விதமான தீமைகள் விளைகின்றன. கோபமாக பேசினால் குணத்தை இழக்க நேரிடும். வேகமாக பேசினால் அர்த்த்ததை இழக்க நேரிடும். வெட்டியாக பேசினால் நம் வேலை இல்லாமல் போகும். அதிகமாக பேசினால் அமைதி நம்மிடம் இருந்து ஓடிவிடும். ஆணவமாய் பேசினால் அன்பு நம்மை விட்டு அகன்று போகும். எப்படி பேச வேண்டும்?
1. சிந்தித்து பேச வேண்டும்
எதையும் பேசுவதற்கு முன் பல தடைவைகள் நன்றாக சிந்தித்துப் பேச வேண்டும். நன்றாக சிந்தித்து பேசாத வார்த்தைகள் பிரச்சினைகளையே கொண்டு வரும்.
2. சிறப்பாய் பேச வேண்டும்
நம் பேசும் வார்த்தைகள் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். பிறரால் எளிதில் மறக்க முடியாத வார்த்தைகளாக இருக்க வேண்டும். நம் வார்த்தைகள் பிறருக்கு சிறப்பையும், பூரிப்பையும் கொடுக்க வேண்டும்.
மனதில் கேட்க…
1. எனக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியுமா?
2. இனி பேசும்போது சிந்தித்து பிறர் சிறப்படையும்படி சிறப்பாக பேச பயிற்சி எடுக்கலாமா?
மனதில் பதிக்க…
கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்(எபே 4:29)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா