பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன் சபை உரையாளர் ( பிரசங்கி ) 7 : 8
நாளைக்கு என்ன நம்முடைய வாழ்க்கையில் நடக்கும், அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. அப்படியிருக்க பெருமை பாராட்ட வேண்டியதின் அவசியம் தான் என்னவோ?நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நாம்.வீம்பு பாராட்டி பெருமைக் கொண்டு கடவுள் விரும்பாத காரியத்தை செய்து வாழ்வதைவிட பொறுமையோடு இருப்பதே உத்தமம்.பெருமையினால் தீமையே உண்டாகும். செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார்,தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். யாக்கோபு 4 : 6. மற்றும் 1 பேதுரு 5 : 5 ல் வாசிக்கிறோம்.
ஆகையால் கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தும் பொழுது ஆண்டவர் நம்மை உயர்த்துவார். ஏற்ற காலத்தில் ஏற்ற நேரத்தில் நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார். நம்முடைய கவலையெல்லாம் அவரிடம் வைத்துவிட்டு அவரின் கிருபைக்கு காத்திருப்போம். ஆண்டவரின் கிருபை அளவில்லாதது.
ஒரு கம்பெனியில் ஒரு நேர்மையுள்ள மனிதர் வேலைப்பார்த்து வந்தார். அவர் கடவுளுக்கு மிகவும் பயந்து பயபக்தியோடு வாழ்ந்ததால் லஞ்சம் வாங்குவதை விரும்பமாட்டார். தன்னிடம் ஒப்படைத்த வேலையை மிகவும் அருமையாக, உண்மையாக செய்து வந்தார். ஆனால் சில பேருக்கு அது பிடிக்காததால் அவரை மாட்டி விட்டு இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார்கள். அதன்படி யே அவர்கள் செய்த தவறை அவர்மேல் போட்டு அவரை மாட்டிவிட்டார்கள். அதனால் அவருக்கு வேலை போய்விட்டது.
மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் தனது நம்பிக்கையை இழக்காமல் கடவுளிடம் பொறுமையோடு ஜெபித்து வந்தார். ஒருநாள் அந்த கம்பெனியின் உரிமையாளர் கணக்கு எல்லாவற்றையும் சரிப்பார்த்து உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்தார். உடனே அவர்களை அழைத்து விசாரிக்கும் வண்ணமாக விசாரித்ததில் அவர்களும் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக்கொண்டார்கள். பிறகு அந்த நேர்மையான மனிதரை அழைத்து முன்பைவிடகூடுதலான சம்பளம் கொடுத்து உயர்ந்த பதவியைக் கொடுத்து அந்த கம்பெனியில் உயர்த்தினார். ஒரு மனிதனே அவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய ஆண்டவர் நாம் பொறுமையோடும், மனத்தாழ்மையோடும், நடந்துக்கொள்ளும் பொழுது நம்மை நிச்சயமாகவே உயர்த்துவார். ஆகையால் நாம் ஒருபோதும் சோர்ந்து போகாமல் நம்கைகளோடு கூட நமது இதயத்தையும் ஆண்டவரை நோக்கி திருப்புவோம். அப்பொழுது ஆண்டவர் தரும் நன்மையால் நிரப்பப்படுவோம்.
அன்பின் இறைவா!
உம்மையே போற்றுகிறோம். தகப்பனே உம்மை சிலுவையில் ஆணியால் அடித்து துன்புறுத்தின பொழுது நீர் எவ்வளவு பொறுமையோடு இருந்து எங்களுக்காக அதை தாங்கிக்கொண்டீர். அப்பா, பிதாவே நீர் மனம் பதறி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லையே! எங்கள்மேல் உள்ள அன்பினால் அவற்றை பொறுத்துக்கொண்டு பொறுமையோடுஇருந்தீரே. அதைப்போல் நாங்களும் எங்களுக்கு தீமை செய்பவர்களை மன்னித்து பொறுமையோடும், அன்போடும் நடந்துக்கொள்ள உதவி செய்யும்.பெருமை பாராட்ட எங்களிடத்தில் ஒன்றும் இல்லையே. நாங்கள் யாவரும் மண்ணான மனிதர்கள் என்பதை நினைத்து அறிந்து உமது சித்தம் செய்து, நீர் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து உமக்கே மகிமையை செலுத்த எங்களுக்கு அனுதினமும் போதித்து வழிநடத்தும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தேவனே! ஆமென்,அல்லேலூயா!!